search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு உற்பத்தியாளர்கள் 22-ந்தேதி போராட்டம்
    X

    பட்டாசு உற்பத்தியாளர்கள் 22-ந்தேதி போராட்டம்

    சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் வருகிற 22-ந்தேதி போராட்டம் நடத்துகின்றனர்.
    விருதுநகர்:

    காற்று, ஒலி மாசுபாட்டை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    குறிப்பாக பண்டிகை காலங்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் கடுமையான கட்டுப்பாடுகளால் பட்டாசு உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிவகாசியில் பட்டாசு தொழிலை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பசுமை பட்டாசுகளை தயாரிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. இதற்கு பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் தொழிற்சாலைகளில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியாது என்று அறிவித்துள்ளன.

    இந்த நிலையில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்க கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். பட்டாசு உற்பத்தியாளர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் பட்டாசு தயாரிக்க சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி 3 லட்சத்துக்கும் அதிகமான பட்டாசு தொழிலாளர்களை திரட்டி வருகிற 22-ந்தேதி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பட்டாசு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். அப்போது பிரச்சனைக்கு தீர்வு காண முதல்-அமைச்சரிடம் வலியுறுத்துவேன். பிரதமரை சந்திக்கவும் ஏற்பாடு செய்கிறேன். மேலும் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவும் நடவடிக்கை மேற்கொள்வேன் என்று உறுதி அளித்தார்.
    Next Story
    ×