search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகாமிற்கு லாரியில் வந்த யானை
    X
    முகாமிற்கு லாரியில் வந்த யானை

    மேட்டுப்பாளையத்தில் நாளை தொடங்கும் நல வாழ்வு முகாமுக்கு யானைகள் வரத் தொடங்கியது

    மேட்டுப்பாளையத்தில் நாளை தொடங்கும் நல வாழ்வு முகாமிற்கு யானைகள் வரத் தொடங்கியது. #Elephants #Rejuvenationcamp
    மேட்டுப்பாளையம்:

    தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் 48 நாட்கள் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்ப காட்டில் 4 ஆண்டுகள் யானைகள் நல வாழ்வு முகாமும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்படி பவானி ஆற்றுப்படுகையில் 6 ஆண்டுகளும் இந்த முகாம் நடைபெற்றது.

    இந்த ஆண்டு 11-வது யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தொடங்குகிறது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று முடிந்தது.

    முகாம் அலுவலகம், சமையல் கூடம், யானை பாகன்கள் தங்கும் இடம், ஓய்வறை, யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, குளியல் மேடை, ‌ஷவர் மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

    முகாமுக்குள் காட்டு யானைகள் புகுந்து விடாமல் கண்காணிக்க 8 கண்காணிப்பு மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது. சூரிய மின்வேலி, தொங்கும் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    முகாமை அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். முகாமில் பங்கேற்பதற்காக அந்தந்த ஊர்களில் இருந்து கோவில் யானைகள் நேற்றே மேட்டுப்பாளையம் புறப்பட்டது.

    இன்று காலை 7 மணிக்கு முதல் முதலாக மயிலாடுதுறை மயூரநாத சுவாமி கோவில் யானை அபயாம்பிகை வந்து சேர்ந்தது.

    அதனை தொடர்ந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் யானை அபிராமி, கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில் யானை பூமா ஆகியவை வந்து சேர்ந்தது. காலை 9 மணி வரை 10 யானைகள் முகாமிற்கு வந்தது.

    முகாமிற்கு வரும் யானைகளை லாரிகளில் இருந்து இறக்குவதற்கு வசதியாக வனபத்ரகாளியம்மன் கோவில் பின்புற வளாகத்தில் சாய்வு மண் திட்டு அமைக்கப்பட்டு இருந்தது.

    அங்கு யானைகள் இறக்கப்பட்டது. பின்னர் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு யானைகள் அழைத்து வரப்பட்டது. அங்கிருந்த கொடி மரம் முன் நின்ற யானைகள் துதிக்கையை தூக்கி அம்மனை வணங்கியது.

    மயிலாடுதுறை மயூரநாத சுவாமி கோவில் யானை அபயாம்பிகை முகாமில் உள்ள ‌ஷவரில் குளித்து மகிழும் காட்சி.

    பின்னர் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டது. அங்கு பசுந்தீவனம் அளிக்கப்பட்டது. யானைகள் நீண்ட தூரம் லாரியில் பயணம் செய்து வந்ததால் களைப்பு தீர அங்குள்ள ‌ஷவரில் குளியில் போட்டது.

    பின்னர் யானைகள் ஓய்வு எடுக்க தொடங்கியது.  #Elephants #Rejuvenationcamp
    Next Story
    ×