search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் கேட்பாரற்ற நிலையில் நின்ற 8000 வாகனங்கள் பறிமுதல்- ஏலம் விட்டதில் ரூ.2 கோடி வருமானம்
    X

    சென்னையில் கேட்பாரற்ற நிலையில் நின்ற 8000 வாகனங்கள் பறிமுதல்- ஏலம் விட்டதில் ரூ.2 கோடி வருமானம்

    சென்னை மாநகரப்பகுதிகளில் சாலையோரம் கேட்பாரற்ற நிலையில் நின்ற 8000 வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டத்தில் மாநகராட்சிக்கு ரூ.2 கோடி வருமானம் கிடைத்துள்ளது. #chennaicorporation
    சென்னை:

    சென்னை மாநகரப்பகுதிகளில் ஆட்டோ, கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு வருகின்றன.

    இதனால் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும், பொது சுகாதரத்திற்கும் இடையூறாக உள்ளன.

    நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் யாரும் கண்டு கொள்ளாமல் வீதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மாநகராட்சி எடுத்து வருகிறது.

    சாலையின் ஓரங்களிலும், தெருக்களின் முக்கிய பகுதிகளிலும் இது போன்ற வாகனங்கள் யாரும் பயன்படுத்தப்படாமல் கிடப்பதை அகற்ற அதிகாரிகள் களம் இறங்கி பறிமுதல் செய்தனர்.

    சுமார் 8 ஆயிரம் வாகனங்கள் நகரம் முழுவதும் இருந்து கைப்பற்றப்பட்டன. அந்த வாகனங்களின் விவரங்களை மாநகராட்சியின் வெப்சைட்டில் வெளியிட்டுள்ளனர்.

    வாகனங்களின் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை பார்த்து எடுத்து செல்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான வாகனங்களை தேடி யாரும் வரவில்லை. 31 பேர் மட்டுமே வந்து தங்கள் வாகனங்களுக்கான ஆவணங்களை காட்டி திரும்ப பெற்று சென்றனர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:-

    சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு ஆண்டு கணக்கில் யாராலும் கண்டு கொள்ளாமல் உள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 7877 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதில் 31 வாகனங்கள் அதன் உரிமையாளர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் 7687 மோட்டார் சைக்கிள்களும், 90 ஆட்டோக்களும், 104 நான்கு சக்கர வாகனங்களும் அடங்கும்.

    இந்த வாகனங்களை தனித்தனியாக டெண்டர் விடுவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி டெண்டர் நடைமுறைகளை வகுத்து வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை எடுத்தது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு கமிட்டி ஒரு கோடியே 57 லட்சம் விலை நிர்ணயம் செய்திருந்தது. ஆனால் வாகனங்களை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியதால் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக ஏலம் போனது. ரூ.2 கோடியே 21 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

    ஒரே தவணையில் முழு பணத்தையும் செலுத்தி வாகனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தணையின் அடிப்படையில் ஏலம் எடுத்தவருக்கு வாகனங்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சாலையோரம் கேட்பாரற்று நின்ற வாகனங்களை அப்பறப்படுத்தியதில் மாநகராட்சிக்கு ரூ.2 கோடி வருவாய் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் அந்த வாகனங்களால் கொசுக்கள் உற்பத்தி ஆகி பொதுமக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காலம் கடந்து எடுக்கின்ற நடவடிக்கையால் சுகாதார பிரச்சினைகள் ஏற்பட்டு உயிர் இழப்பும் உண்டாகிறது. #chennaicorporation
    Next Story
    ×