search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழிச்சாலை பிரச்சினை - சேலத்தில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு
    X

    8 வழிச்சாலை பிரச்சினை - சேலத்தில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு

    சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலைக்கு எதிராக சேலத்தில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். #ChennaiSalemExpressway #Farmers
    சேலம்:

    சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் இந்த திட்டத்தை கைவிடக்கோரி பாதிக்கப்படுபவர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, அந்த நிலங்களில் எல்லை கற்கள் நடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    இந்த நிலையில் 8 வழிச்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களை சர்வே எண்ணுடன் பட்டியலிட்டு கடந்த வாரம் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கிடையே 8 வழிச்சாலைக்காக கூடுதலாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் பரவியது.

    இதைத்தொடர்ந்து மீண்டும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசாரின் தடையை மீறி சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    8 வழிச்சாலை தொடர்பாக சேலம் அருகே உள்ள நிலவாரப்பட்டி பகுதியில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.


    இதையடுத்து சேலம் நிலவாரப்பட்டி பகுதியில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். ஆனால் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த விவசாயிகளை மல்லூர் போலீசார் அழைத்து கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்தனர், இதையும் மீறி நிலவாரப்பட்டியில் விமல் என்பவரது விவசாய தோட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இந்த கூட்டத்தில் வருகிற 14-ந்தேதி விவசாயிகள் கலெக்டர் ரோகிணியை சந்தித்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுப்பது என்றும், 2-வது கட்டமாக அந்தந்த பகுதியில் ஒரே இடத்தில் திரண்டு விவசாய நிலங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்து அறிவித்தனர். கூட்டத்தில் பேசிய அனைவரும் 8 வழிச்சாலைக்கு எதிராக ஆவேசமாக பேசினர்.

    8 வழிச்சாலைக்கு எதிராக ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம். இதுதொடர்பாக கோர்ட்டிலும் முறையிட்டதால் 8 வழிச்சாலை பணிக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்தோம்.

    இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பால் மீண்டும் நிலங்களை கையகப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் ஒரே வாழ்வாதாரமாக திகழும் அந்த நிலத்தையும் பறித்துக் கொண்டால் நாங்கள் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை.

    8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் யாரும் ஒன்று திரண்டுவிடக் கூடாது என்பதில் போலீசார் தீவிரமாக இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

    போலீசாரின் மிரட்டல்படி கைது செய்தாலும் எங்கள் உயிர் இருக்கும் வரை தொடர்ந்து போராடுவோம், ஒருபோதும் நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் ஆவேசமாக கூறினர்.

    இதனால் சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக மீண்டும் போராட்டம் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது.  #ChennaiSalemExpressway #Farmers
    Next Story
    ×