search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை- செவிலியர் உதவியாளர் உள்பட 3 பெண்கள் கைது
    X

    ரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை- செவிலியர் உதவியாளர் உள்பட 3 பெண்கள் கைது

    தாயின் சம்மதத்துடன் பெண் குழந்தையை ரூ. 1 லட்சத்துக்கு விற்ற 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

    திருச்சி:

    நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, கொளவான் கரை செல்லிப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரேமா. கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக, தனது சித்தி வீடான திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் உள்ள பாண்டிதுரை மனைவி வெள்ளையம்மாள் வீட்டிற்கு சென்றிருந்தார்.

    சம்பவத்தன்று உப்பிலியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பிரேமாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

    அந்த குழந்தையை வெங்கடாசலபுரம் கிராம சுகாதார செவிலியரின் உதவியாளர் சுசீலாதேவி மற்றும் வெள்ளையம்மாள் ஆகியோர், துறையூர் அருகே உள்ள கீரம்பூர் காலனி அமுதசுரபி நகரை சேர்ந்த சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி சகுந்தலா ஆகியோருக்கு ரூ.1 லட்சத்துக்கு விற்றதும், சுப்பிரமணியும், சகுந்தலாவும் குழந்தையை வாங்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இதில் சம்பந்தப்பட்ட சுசீலாதேவி, வெள்ளையம்மாள், சுப்பிரமணி, சகுந்தலா மற்றும் சுரேஷ், பிரேமா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த தியாகராஜன் உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில், முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு சீத்தாராமன், திருச்சி குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த தியாகராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆலோசகர் முத்து மாணிக்கம், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபு மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் துறையூர் அருகேயுள்ள கீரம்பூர் காலனி அமுதசுரபி நகருக்கு சென்று, சகுந்தலாவிடம் இருந்த குழந்தையை மீட்டனர்.

    மேலும் சகுந்தலா, சுசீலாதேவி, வெள்ளையம்மாள் ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த 3 பேருக்கும் குழந்தையை விற்றதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன்பேரில், அவர்கள் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட பெண் குழந்தை திண்டுக்கல் அருகே காந்தி கிராமத்தில் உள்ள பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் அரசு குழந்தைகள் இல்லத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

    Next Story
    ×