search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ, கார் வசதியை 33 ஆயிரம் பேர் பயன்படுத்தினர்
    X

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ, கார் வசதியை 33 ஆயிரம் பேர் பயன்படுத்தினர்

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ, கார் வசதியை கடந்த ஒரு மாதத்தில் 33 ஆயிரத்து 866 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். #MetroTrain
    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக செயல்படுத்தப்படும் மெட்ரோ ரெயிலில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    பயணிகள் வசதிக்காக முக்கியமான நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ, கார் வசதியை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இத்திட்டம் பொது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    திருமங்கலம், கோயம்பேடு, அசோக்நகர், ஆலந்தூர், ஈக்காட்டுதாங்கல், பரங்கிமலை, சின்னமலை, கிண்டி ஆகிய 8 நிலையங்களில் ஷேர் ஆட்டோ வசதியும், அண்ணாநகர் கிழக்கு, கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர், ஏ.ஜி.டி.எம்.எஸ். ஆகிய 5 நிலையங்களில் ஷேர் கார் வசதியும் அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆரம்பத்தில் ஆட்டோவிற்கு ரூ.10, காருக்கு ரூ.15 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ரூ.5 குறைக்கப்பட்டது. பொது மக்கள் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள பஸ் நிலையம், நிறுத்தங்களுக்கு எளிதாக செல்வதற்கு வசதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு மாதத்தில் 33 ஆயிரத்து 866 பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தியுள்ளனர்.

    ஷேர் ஆட்டோவில் 27,562 பயணிகளும், ஷேர் காரில் 6,304 பயணிகளும் பயணித்துள்ளனர். கிண்டி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து 8166 பயணிகள் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக திருமங்கலத்தில் இருந்து 4,995 பேர் பயணம் செய்தனர். ஆலந்தூர் நிலையத்தில் இருந்து 3,407 பயணிகள் புறப்பட்டு சென்றுள்ளனர்.

    ஷேர் கார் வசதியை ஏ.ஜி.டி.எம்.எஸ். நிலையத்தில் இருந்து 1,715 பேர் பெற்றுள்ளனர். அதற்கு அடுத்த படியாக கோயம்பேடு நிலையத்தில் இருந்து 1,593 பயணிகள் காரில் பயணம் செய்துள்ளனர்.

    விழிப்புணர்வு, பண்டிகை காலங்களில் பாரம்பரிய போட்டிகள் நடத்தி பயணிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. #MetroTrain
    Next Story
    ×