search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு கேட்டபடி நிவாரணத்தொகை வழங்க வேண்டும்- மத்திய அரசுக்கு, அமைச்சர்  வேண்டுகோள்
    X

    தமிழக அரசு கேட்டபடி நிவாரணத்தொகை வழங்க வேண்டும்- மத்திய அரசுக்கு, அமைச்சர் வேண்டுகோள்

    தமிழக அரசு கேட்டபடி நிவாரணத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். #GajaCyclone #RajendraBalaji
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, சுந்தர கோட்டை, நீடாமங்கலம், வல்லூர் உட்பட ஒவ்வொரு கிராமம் கிரமமாக சென்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மாவட்ட, ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பாக வழங்கப்பட்ட நிவாரண பொருட்களையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் டெல்டா மாவட்டங்களில் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.

    டெல்டா பகுதி விவசாயிகள் குழந்தைகளைபோல தென்னை மரங்களை வளர்த்து வந்தனர். அவை அடியோடு சாய்ந்தது வேதனை அளிக்கின்றது.

    மின்சாரம் வழங்குவதற்காக மின் களப்பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறார்கள். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தேவையான உணவு பொருட்களான அரிசி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், பிஸ்கட் பாக்கெட், பால்பவுடர், மண்எண்ணை ஆகிய நிவாரண பொருட்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

    கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்ததும், உரிய இழப்பீடுகள் விரைந்து வழங்கப்படும். பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிவாரண பொருட்கள் வந்து கொண்டிருக்கிறது. நிவாரண பொருட்கள் தடையின்றி மக்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதற்காக, முதலமைச்சர் உத்தரவின் படி, அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்ட நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #RajendraBalaji

    Next Story
    ×