search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மசாஜ் சென்டரில் சோதனை: டிஜிபி சுற்றறிக்கை அனுப்பினால் என்ன?- ஐகோர்ட்டு கேள்வி
    X

    மசாஜ் சென்டரில் சோதனை: டிஜிபி சுற்றறிக்கை அனுப்பினால் என்ன?- ஐகோர்ட்டு கேள்வி

    மசாஜ் சென்டரில் எப்போது, எந்த சூழ்நிலையில் போலீசார் சோதனை நடத்தலாம் என்ற வரையறை செய்து தமிழக டி.ஜி.பி., அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பினால் என்ன?’ என்று ஐகோர்ட் கேள்வியெழுப்பியுள்ளது.
    சென்னை:

    கோவையை சேர்ந்தவர் புஷ்பா. இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘கோவையில், ‘ஸ்பா’ என்ற மசாஜ் சென்டர் நடத்தி வருகிறேன். இங்கு, கேரளாவின் பாரம்பரியமான ஆயுர்வேத சிகிச்சை அடிப்படையில் உடலுக்கு மசாஜ் செய்யப்படுகிறது. இதனால், உடலில் உள்ள பல நோய்கள் குணமடைகின்றன.

    ரத்த நாளங்கள் சரியாகி, ரத்த ஓட்டம் சீராகுகிறது. ஆனால், தேவையில்லாமல் போலீசார் இதுபோன்ற பாரம்பரியமான மசாஜ் சென்டரில் சோதனை நடத்துகின்றனர். 2014-ம் ஆண்டு மசாஜ் சென்டரில் தேவையில்லாமல், அடிப்படை முகாந்திரம் இல்லாமல், சோதனை நடத்தக்கூடாது என்று அப்போதைய ஐகோர்ட்டு நீதிபதி வி.ராம சுப்பிரமணியம் தீர்ப்பு அளித்தார்.

    எனவே, தேவையில்லாமல் மசாஜ் தொழிலில் தலையிடக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். பின்னர் நீதிபதி, ‘ஐகோர்ட்டு ஏற்கனவே 2 முறை உத்தரவிட்டுள்ளது.

    அந்த உத்தரவின் அடிப்படையில், மசாஜ் சென்டரில் எப்போது, எந்த சூழ்நிலையில் போலீசார் சோதனை நடத்தலாம் என்ற வரையறை செய்து தமிழக டி.ஜி.பி., அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பினால் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக சிறப்பு அரசு பிளீடர் ஏ.பாலமுருகன் கூறினார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
    Next Story
    ×