search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசியல்வாதி என்ற அந்தஸ்தை நடிகர் கமல் இன்னும் பெறவில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ
    X

    அரசியல்வாதி என்ற அந்தஸ்தை நடிகர் கமல் இன்னும் பெறவில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ

    கமல்ஹாசனின் அறிக்கைகளும், நடவடிக்கைகளை பார்க்கும் போது, அவர் இன்னும் அரசியல்வாதிக்கான அந்தஸ்தினை பெறவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். #Minister #KadamburRaju #KamalHassan
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கம்மவார் சங்கம் சார்பில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வாழும் கம்மவார் மக்களை இணைக்கும் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடுக்கு அவர் சொந்த ஊரான வையம்பாளையத்தில் நினைவு மண்டபம் அமைக்கும் பணி, முடியும் தருவாயில் இருக்கிறது. விரைவில் அதனை முதல்வர் திறந்து வைப்பார்.

    அவர் கோவில்பட்டியில் உயிர் நீத்ததால் அவருக்கு சிலை நிறுவப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு சிலை அமைக்கப்படும்.

    மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் மக்களுக்கு தவறான கருத்துக்களை, மக்களின் யதார்த்த நிலையை தெரியாமல் நடிகர் கமலஹாசன் பேசி வருகிறார். இன்னும் நடிகராக தான் இருக்கிறார். அரசியல்வாதியாக மாறியதாக தெரியவில்லை. அவருடைய அறிக்கைகளும், நடவடிக்கைகளை பார்க்கும் போது, இன்னும் அரசியல்வாதிக்கான அந்தஸ்தினை அவர் பெறவில்லை என்பது தெரிகிறது.

    கஜாபுயல் குறித்து அறிவிப்பு வந்ததும் அரசு நடவடிக்கை எடுத்த காரணத்தினால் உயிர் சேதம் அதிகளவில் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ பாராட்டியுள்ளனர். கஜா புயல் சேதம் குறித்து போர்கால நடவடிக்கையாக தமிழக முதல்வர் பார்வையிட்டு, பிரதமரிடம் எடுத்துரைத்து ரூ.15 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டுள்ளார்.

    மத்திய குழு தற்போது ஆய்வு செய்து வருகிறது. மக்களின் இயல்பு நிலைக்கு கொண்டு வர அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அமைச்சர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இதனை அரசியலாக பார்ப்பது நல்லது கிடையாது. எதிர்கட்சிகள் பாராட்ட வேண்டும் என்பதற்காக அல்ல பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர அரசு அர்ப்பணிப்புடன் தனது கடமையை செய்து வருகிறது.

    மத்திய அரசு சார்பில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பா.ஜ.க தலைவர் தமிழிசை ஆகியோர் பாதித்த பகுதிகளை பார்த்து உள்ளனர். முதல்வர் பாதிப்பு குறித்து அறிக்கை அளித்துள்ளார். பிரதமருக்கு திட்டமிட்ட அலுவல் இருக்கும், கஜாபுயல் பாதித்த மாவட்டங்களை இயற்கை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். இதில் மத்திய அரசு இணக்கமான முடிவு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Minister #KadamburRaju
    Next Story
    ×