search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியர் பணியிட மாறுதல் ஊழல் பற்றி விசாரணை தேவை- ராமதாஸ்
    X

    ஆசிரியர் பணியிட மாறுதல் ஊழல் பற்றி விசாரணை தேவை- ராமதாஸ்

    ஆசிரியர் பணியிட மாறுதலில் நடைபெறும் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #PMK #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் நிர்வாக பணியிட மாறுதல் என்ற பெயரில் கொத்துக்கொத்தாக ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். மாணவர்களின் நலனை சற்றும் கருத்தில் கொள்ளாமல் பணத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு, தமிழக அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த இடமாற்றங்கள் சமூக நீதிக்கு எதிரானவை; கண்டிக்கத்தக்கவையும் ஆகும்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 400-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நிர்வாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 175 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அரசு, நிர்வாக மாறுதல் என்ற பெயரில் ஆசிரியர்களை அவர்கள் விரும்பும் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்வதன் மூலம் அரசு பள்ளிகளை ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளாக மாற்றி வருகிறது.

    வடமாவட்டங்களில் நிலவும் பின்தங்கிய நிலைமை காரணமாக அப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களாக தேர்வாகவில்லை. மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பின் தங்கிய பகுதிகளில் பணியாற்ற விருப்பம் இல்லை. அதனால் அவர்கள் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் சொந்த மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.

    இந்த மாவட்டங்களில் இருந்து மட்டும் கடந்த ஒரு மாதத்தில் ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மாறுதலுக்கு ரூ.7 லட்சம் வரை கையூட்டு வசூலிக்கப்படுவதாகவும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். ஒரு மாறுதலுக்கு ரூ.7 லட்சம் என்றால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாறுதல்களுக்கு கையூட்டாக எத்தனை கோடி வசூலிக்கப்பட்டிருக்கும்? என்பதை மக்களே கணக்கிட்டுக் கொள்ள முடியும்.

    ஆசிரியர்கள் கலந்தாய்வு முறையில் பொது மாறுதல் செய்யப்பட வேண்டும் என்பது தான் விதியாகும். அவ்வாறு செய்யப்படும் போது காலியிடங்களுக்கு மட்டும் தான் ஆசிரியர்களை மாற்ற முடியும். பற்றாக்குறை நிலவும் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய முடியாது.

    இடையில் சில காலம் ஓய்ந்திருந்த நிர்வாக மாறுதல் ஊழல் இப்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. ஆசிரியர்கள் இடமாறுதல் குறித்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் இம்மாதத் தொடக்கத்தில் அளித்தத் தீர்ப்பில் ஆசிரியர்கள் இடமாற்றத்திற்காக தனிக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு ஆணையிட்டிருந்தது.

    அத்தகைய கொள்கையை உருவாக்க வேண்டிய அரசு, அதற்கு முன்பே ஆசிரியர்களை மாற்றம் செய்து கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆளுனர் ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, வட மாவட்டங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PMK #Ramadoss
    Next Story
    ×