search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் ஜெயிலில் 100 போலீசார் அதிரடி சோதனை- செல்போன், கஞ்சா பறிமுதல்
    X

    புழல் ஜெயிலில் 100 போலீசார் அதிரடி சோதனை- செல்போன், கஞ்சா பறிமுதல்

    புழல் ஜெயிலில் இன்று அதிகாலை 100 போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் செல்போன் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. #PuzhalJail
    செங்குன்றம்:

    புழல் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் கைதிகள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கைதிகளுக்கு செல்போன், கஞ்சா, சொகுசு வாழ்க்கை தாராளமாக கிடைப்பதாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. மேலும் கைதிகள் உல்லாச வாழ்க்கை வாழும் புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் ஜெயிலில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 10-க்கும் மேற்பட்ட டி.வி.க்கள், 80 ரேடியோக்கள், பிரியாணி செய்ய பயன்படுத்தும் அரிசி, மெத்தைகள் உள்ளிட்ட வைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த சோதனை முடிந்த பின்னரும் தொடர்ந்து கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நீடித்து வந்தது.

    இந்த நிலையில் புழல் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்த போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி இன்று அதிகாலை 5.30 மணி அளவில் புழல் சரக உதவி கமி‌ஷனர் வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ஜெயந்தி உள்பட 100 போலீசார் ஜெயிலுக்கு வந்தனர்.

    அவர்கள் அதிரடியாக தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது தண்டனை ஜெயில் கழிவறை அருகே மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 2 செல்போன்களை கைப்பற்றினர். விசாரணை கைதிகள் அறையில் இருந்த 2 கஞ்சா பொட்டலங்களும் சிக்கியது.

    செல்போன், கஞ்சா எப்படி கைதிகளுக்கு கிடைக்கிறது. இதில் ஜெயில் ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்று விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக புழல் போலீசில் புகார் செய்துள்ளனர்.

    புழல் ஜெயிலில் 100 போலீசார் அதிரடியாக சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புழல் ஜெயிலில் விசாரணை கைதிகள் அறையில் 2ஆயிரத்து 600 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 154 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கைதிகளிடையே மோதலை தடுக்கவும், இட நெருக்கடியை போக்கவும் 154 குண்டர் சட்ட கைதிகள் 2-வது பிளாக்கில் உள்ள தண்டனை கைதிகள் அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். #PuzhalJail
    Next Story
    ×