search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட பாலகிருஷ்ணன் - ஹேமலதா.
    X
    கொலை செய்யப்பட்ட பாலகிருஷ்ணன் - ஹேமலதா.

    புதுவை அருகே கணவன்- மனைவி கொலை

    புதுவையில் கணவன்- மனைவியை கொன்று கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு அண்ணா நகர் 14-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 72). இவரது மனைவி ஹேமலதா (65).

    பாலகிருஷ்ணன் மூத்த வக்கீல் ஆவார். பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவரும் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்கள்.

    கணவன் - மனைவி மட்டும் புதுவையில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். அவருடைய வீடு தரை தளத்துடன் சேர்த்து 3 மாடிகள் கொண்டதாகும்.

    இதில் தரைத்தளத்தில் கணவன் - மனைவி வசித்து வந்தனர். முதல் தளம் காலியாக இருந்தது. எனவே வாடகைக்கு விடுவதற்கான அறிவிப்பு பலகையை தொங்க விட்டு இருந்தனர்.

    2-வது மாடியில் ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். நேற்று இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் முன்பக்க விளக்கு போடவில்லை.

    எனவே, மேல் வீட்டினர் விளக்கை போட்டு விட்டு சென்றனர். இன்று காலை அவர்கள் கீழே வந்து பார்த்த போது வீட்டில் யாருமே நடமாட்டம் இல்லாதது போல் இருந்தது.

    பாலகிருஷ்ணன் புதுவை முன்னாள் அமைச்சர் தேனீ. ஜெயக்குமாரின் நெருங்கிய உறவினர் ஆவார். எனவே, தேனீ.ஜெயக்குமாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் நேரில் வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

    அப்போது பாலகிருஷ்ணனும், அவரது மனைவி ஹேமலதாவும் படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

    இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

    யாரோ மர்ம மனிதர்கள் அவர்களை தலையணையால் அமுக்கி மூச்சு திணறடித்து கொன்று அங்கிருந்த நகை - பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். எவ்வளவு நகை- பணம் கொள்ளை போனது? என்பது தெரியவில்லை.

    மேல் மாடியை வாடகைக்கு விடுவது பற்றி அறிவிப்பு பலகை தொங்க விடப்பட்டு இருந்ததால் வீட்டை வாடகைக்கு கேட்பது போல் வந்து அவர்களை கொலை செய்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

    நேற்று மாலையில இந்த கொலை நடந்திருக்கலாம் எனதெரிகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×