search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்காலில் ‘கஜா’ புயலால் தரைதட்டிய கப்பலை மீட்பதில் சிக்கல்
    X

    காரைக்காலில் ‘கஜா’ புயலால் தரைதட்டிய கப்பலை மீட்பதில் சிக்கல்

    காரைக்காலில் கஜா புயலால் தரைதட்டிய கப்பலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 4 நாட்களாக கப்பல் அதே இடத்தில் நிற்கிறது. #gajacyclone #ship #heavyrain

    காரைக்கால்:

    மும்பையில் இருந்து புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள துறைமுகத்துக்கு தனியார் கப்பல் ஒன்று தூர்வாரும் பணிக்கு வந்தது. அந்த கப்பலில் கேப்டன் உள்பட 7 பேர் பணியில் இருந்தனர். துறைமுக பகுதியில் தூர்வாரும் பணி முடிந்து அடுத்த பணிக்காக அந்த கப்பல் காரைக்கால் அருகே நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி ‘கஜா’ புயல் கரையை கடந்தது.

    இதன் காரணமாக காரைக்கால் பகுதியில் கடல் கொந்தளிப்பு, பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. காரைக்கால் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது.

    மேலும் பலத்த சூறாவளி காற்றானது நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்ட மும்பை கப்பலை கரை நோக்கி இழுத்து வந்தது. அதில் இருந்த ஊழியர்கள் கப்பலை நிறுத்துவதற்கு முயற்சி செய்தும் பயனில்லை.

    இதனால் அந்த கப்பல் காரைக்கால் அருகே மேலவாஞ்சூர் கடலில் தரைதட்டி நின்றது. அந்த கப்பலில் இருந்த ஊழியர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

    தரைதட்டி நிற்கும் கப்பலை மீட்க மும்பையில் இருந்து கப்பல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த கப்பல் இதுவரை காரைக்கால் துறைமுகத்துக்கு வரவில்லை. இதனால் அந்த தரைதட்டிய கப்பலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 4 நாட்களாக கப்பல் அதே இடத்தில் நிற்கிறது.

    இது குறித்து காரைக்கால் தனியார் துறைமுக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தரைதட்டி நிற்கும் கப்பலை மீட்பதற்கு 3 இழுவை கப்பல்கள் தேவைப்படும். ஒரு கப்பல் காரைக்கால் துறைமுகத்தில் உள்ளது. மீதி 2 கப்பல்கள் மும்பையில் இருந்து வரவேண்டும். ஆனால் தற்போது கஜா புயலை அடுத்து தொடர்ந்து புயல்கள் வர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மும்பையில் இருந்து இழுவை கப்பல்களை வரவைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    புயல், மழை ஓய்ந்து இயல்புநிலை திரும்பிய பிறகுதான் மும்பையில் இருந்து இழுவை கப்பல்களை வரவழைக்க முடியும். அதுவரை இந்த கப்பல் அதே இடத்தில்தான் நிற்கும்.

    பொதுவாக கடலின் நீர்மட்டம் அதிகளவு இருந்தால்தான் இழுவை கப்பலை இயக்க முடியும். தற்போது காரைக்கால் கடலில் நீர்மட்டம் குறைவாகவே உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவும் தரைதட்டி நிற்கும் கப்பலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் மும்பையில் இருந்து இழுவை கப்பல்கள் வரவழைக்கப்பட்டு இந்த கப்பலை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கப்பலில் உள்ள 7 ஊழியர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அவர்கள் ஏற்கனவே வைத்துள்ளனர். எனவே அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இதுவரை அவர்களும் கப்பலில் இருந்து இறங்கி வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #gajacyclone #ship #heavyrain

    Next Story
    ×