search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திட்டக்குடி அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து ரூ. 1.5 லட்சம் கொள்ளை
    X

    திட்டக்குடி அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து ரூ. 1.5 லட்சம் கொள்ளை

    திட்டக்குடி அருகே உண்டியலை உடைத்து இரண்டு கோவில்களில் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. #Robbery
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த மேல்ஆதனூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கும்பாபிஷேகம் நடந்தது.

    கோவிலின் பூசாரியாக வேலாயுதம் என்பவர் இருந்து வருகிறார். அவர் வழக்கம்போல் பூஜைகளை முடித்து கொண்டு நேற்று இரவு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் கோவிலின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த 2 உண்டியல்களை அடியோடு பெயர்த்து எடுத்தனர். பின்னர் அம்மன் கழுத்தில் கிடந்த ½ பவுன் நகையையும் திருடினர்.

    இதைத்தொடர்ந்து இந்த கோவிலின் அருகே இருந்த அய்யனார் கோவிலுக்குள் புகுந்தனர். அங்கிருந்த உண்டியலையும் பெயர்த்து எடுத்து 3 உண்டியல்களையும் வெளியே கொண்டு சென்றனர். அதனை உடைத்து பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் மாரியம்மன் கோவிலை திறக்க வந்த பூசாரி வேலாயுதம் கோவிலில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து ராமநத்தம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கோவிலில் கொள்ளபோன உண்டியல்கள் உடைந்த நிலையில் அருகில் உள்ள வயல்வெளியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நகை மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

    கோவிலுக்குள் புகுந்து நகை, பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×