search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்கால்: மின்தடையை கண்டித்து சாலையில் மரங்களை போட்டு மறியல்- போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
    X

    காரைக்கால்: மின்தடையை கண்டித்து சாலையில் மரங்களை போட்டு மறியல்- போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

    காரைக்கால் பகுதியில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள சாலையில் மரங்களை போட்டியில மறியல் செய்தனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதமும் நடைபெற்றது. #Gaja
    காரைக்கால்:

    தமிழகத்தை மிரட்டிய ‘கஜா’ புயல் நாகை- வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. ‘கஜா’ புயல் கரையை கடந்ததையொட்டி நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல் மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

    ‘கஜா’ புயல் காரைக்கால் பகுதியை கபளிகரம் செய்தது. சூறாவளி காற்றில் 200 மின்கம்பங்கள் சாய்ந்தன. காரைக்கால் பாரதியார் வீதி, காமராஜர் சாலை, நேரு வீதி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. ஏராளமான வீடுகளும் பாதிக்கப்பட்டன. இதனால் காரைக்கால் சின்னாப்பின்னமாது.

    ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் கடந்த 15-ந்தேதி இரவு 7 மணி முதல் காரைக்கால் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் 16-ந்தேதி இரவு ஒருசில பகுதிகளுக்கு மட்டும் மின் விநியோகம் செய்யப்பட்டது.

    இதனால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. மேலும் காரைக்கால் நகர் பகுதியில் அடிக்கடி மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இந்த நிலையில் தருமபுரம், புதுத்துறை, லெமேர் வீதி, நிரவி, விழிதியூர், நெடுங்காடு, திருநள்ளாறு, திரு.பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும், நகரின் ஒரு சில பகுதிகளிலும் நேற்று இரவு 2-வது நாளாக மின்தடை நீடித்தது.

    எனவே பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அவதியடைந்தனர். மின் இணைப்பு கொடுக்கப்பட்ட நகர் பகுதியில் நேற்று ஒரே நாளில் 7 முறை மின்தடை ஏற்பட்டதால் அவர்களும் பாதிக்கப்பட்டனர்.

    காரைக்கால் சின்னக்கண்ணு செட்டிவீதி, இலக் காரவீதி, ஆசிரியர் நகர், மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 2-ம் நாளாக தொடர்ந்து மின்தடை இருந்தது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று இரவு காரைக்கால் பாரதியார் சாலையில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ‘கஜா’ புயலில் முறிந்து விழுந்த மரங்களை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மின் இணைப்பு கொடுக்கும்வரை சாலை மறியலை கைவிடமாட்டோம் என்றனர். இதைத் தொடர்ந்து போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால், நாகை- சென்னை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×