search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் சேத கணக்கெடுப்பில் குளறுபடி- அதிகாரிகள், போலீசார் மீது விவசாயிகள் கல்வீசி தாக்குதல்- வாகனங்களுக்கு தீ வைப்பு
    X

    புயல் சேத கணக்கெடுப்பில் குளறுபடி- அதிகாரிகள், போலீசார் மீது விவசாயிகள் கல்வீசி தாக்குதல்- வாகனங்களுக்கு தீ வைப்பு

    புயல் சேத கணக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டதால் அதிகாரிகள், போலீசார் மீது விவசாயிக்ள கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. #GajaCyclone
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பு பெருமளவில் சேதத்தை எற்படுத்தி இருக்கிறது. கடந்த 2 நாட்களாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்குடி, கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதியில் கஜா புயலின் பாதிப்பு அதிகம் உள்ளது.

    அப்பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழை, பலா, தென்னை மரங்கள், மலர் தோட்டங்கள் சேதமடைந்துள்ளன. ஆனால் இது பற்றிய முழுமையான தகவல் வெளியாகவில்லை. சேதமடைந்த பகுதியை அதிகாரிகள் பார்வையிட வராததால் அப்பகுதி விவசாயிகள் விரக்தியில் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு வேளாண்மை உதவி அலுவலர்கள் 2 பேர் கொத்தமங்கலம் பகுதியில் சேத மதிப்பை கணக்கிட சென்றனர். அப்போது அவர்களை கிராம மக்கள் திடீரென்று சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையறிந்த டி.ஆர்.ஓ. ராமசாமி, ஆர்.டி.ஓ. டெய்சி குமார், தாசில்தார் ரத்தின குமாரி ஆகியோர் டி.எஸ்.பி. அய்யனார் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் நேற்றிரவு சேதம் பற்றி கணக்கெடுக்க ஆலங்குடி தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர்.

    அப்போது வழியில் கொத்தமங்கலத்தில் வழி மறித்த விவசாயிகள், தங்கள் பகுதியில் கணக்கெடுக்கப்பட்ட சேதம் குறித்து விசாரித்தனர். அதில் குளறுபடி இருந்ததாக தெரிவித்த விவசாயிகள் திடீரென ஆத்திரமடைந்து அதிகாரிகள், போலீசார் மீது கல்வீசி தாக்கினர். டி.எஸ்.பி. அய்யனார் தலையில் கல் தாக்கியதில் அவர் காயமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்கள் மூலம் வெளியேறினர்.

    இதனிடையே அங்கு நின்ற தாசில்தார், டி.எஸ்.பி., போலீசார் வந்த 4 கார்களுக்கு விவசாயிகள், கிராம மக்கள் தீ வைத்தனர். இதில் கார்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள், விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியதால் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×