search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம்- கனிமொழி எம்பி பேச்சு
    X

    தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம்- கனிமொழி எம்பி பேச்சு

    20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேசினார். #kanimozhi #dmk #mkstalin

    தூத்துக்குடி:

    தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. பல இடங்களில் மின்சாரம் முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. மக்கள் அடிப்படை வசதிகளை கூட பெற முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்களின் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.


    அதை தாண்டி டெங்கு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்த மழைக்கு பிறகு வரக்கூடிய சுகாதார சீர்கேடுகள், அதனால் வரக்கூடிய பிரச்சினைகளை சரிசெய்ய அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    சமீபகாலமாக பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. தர்மபுரியில் நடந்த சம்பவத்தைகூட காவல்துறையே அதை மூடி மறைக்க காரணமாக இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல்துறையே குற்றங்களுக்கு துணை போகும் சூழல் இருந்தால், யாருக்கு என்ன பாதுகாப்பு கொடுக்க முடியும்?.

    தமிழகத்தில் ஜனநாயக முறையில் இடைத்தேர்தல் வந்தால் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும். மக்கள் இந்த ஆட்சி எப்போது போகும் என்றுதான் எதிர்ப்பார்த்து உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் நடந்த வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி கலந்தாய்வு கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    கட்சி பொறுப்புகளில் அதிக அளவில் பெண்கள் வர வேண்டும். பெண்களுக்கு தி.மு.க.வில் கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை உள்ளது. மகளிர் அணியினர் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைத்து பணிகளையும் முன்னெடுத்து செல்ல வேண்டும். தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் வர உள்ளது.

    தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய தேர்தல். ஆட்சிமாற்றத்தை கூட கொண்டுவரக்கூடிய தேர்தல். மக்கள் சரியாக வாக்களித்தால் ஆட்சி மாற்றத்தை கூட நம்மால் கொண்டுவர முடியும். தி.மு.க. வெற்றி மகளிர் கையில் உள்ளது. அது உங்கள் பொறுப்பு. மு.க.ஸ்டாலினை முதல்அமைச்சராக்க வேண்டும். தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும். அதற்கான பணியை இன்றே நீங்கள் தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #kanimozhi #dmk #mkstalin

    Next Story
    ×