search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயலால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு
    X

    கஜா புயலால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு

    கஜா புயல் கரையை கடந்த போது வீசிய பலத்த காற்றில் தண்டவாளத்தில் மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.#GajaCyclone #TrainsCancel
    சென்னை:

    ‘கஜா’ புயல் காரணமாக நேற்று 3 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, வேளாங்கன்னி வழியாக செல்லக்கூடிய ரெயில்கள் நிறுத்தப்பட்டன.

    சென்னை எழும்பூரில் இருந்து நேற்று திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் விருதாச்சலம், திருச்சி வழியாக இயக்கப்பட்டன. திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்த ரெயில் இரவு தஞ்சாவூரில் நிறுத்தப்பட்டது.

    புயல் கரையை கடந்த போது வீசிய பலத்த காற்றில் தண்டவாளத்தில் மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் கும்பகோணம் மார்க்கம் வழியாக சென்னைக்கு ரெயில்கள் இன்று இயக்கப்படவில்லை. ரெயில் பாதையை ஆய்வு செய்த பிறகு தான் அந்த மார்க்கமாக போக்குவரத்து தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்று காலையில் எழும்பூரில் இருந்து திருச்சிக்கு சோழன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் சிதம்பரம், கும்பகோணம் வழியாக செல்லாமல் வாழப்பாடி, விருத்தாச்சலம் வழியாக திருச்சி சென்றது.

    தஞ்சாவூரில் நிறுத்தப்பட்ட திருச்செந்தூர் ரெயில் மீண்டும் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டு விருத்தாச்சலம் வழியாக எழும்பூருக்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தாமதமாக வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக காலை 11.15 மணிக்கு எழும்பூர் வந்து சேரக்கூடிய இந்த ரெயில் வரக்கூடிய நேரம் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் இன்று மாலை 4.05 மணிக்கு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் விருத்தாச்சலம் மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

    மேலும் இன்று இரவு தஞ்சாவூர், வேளாங்கன்னி புறப்படக்கூடிய ரெயில்கள் இயக்கப்படுமா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும் தென்மாவட்டத்தில் இருந்து எழும்பூர் வரக்கூடிய அனைத்து ரெயில்களும் இன்று வந்து சேர்ந்தன.

    இதேபோல கோவையிலிருந்து திருச்சி வழியாக மன்னார்குடிக்கு சென்ற செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.

    மதுரையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மணப்பாறை வையம்பட்டி அருகே வந்தபோது காலை 8.30 மணிக்கு மின்சாரம் கிடைக்காததால் நிறுத்தப்பட்டது.

    திருச்சியில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு சென்ற கரூர் பயணிகள் ரெயிலும் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. மதுரை-ராமேஸ்வரம், ராமேஸ்வரம்-மதுரை, திருச்சி-ராமேஸ்வரம், ராமேஸ்வரம்-திருச்சி இடையே ரெயில்கள் இன்று (16-ந்தேதி) ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டது. திருச்சி- மயிலாடுதுறை, தென்காசி பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. #GajaCyclone #TrainsCancel
    Next Story
    ×