search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் எதிரொலி: ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை - 2-வது நாளாக ரெயில் போக்குவரத்து ரத்து
    X

    கஜா புயல் எதிரொலி: ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை - 2-வது நாளாக ரெயில் போக்குவரத்து ரத்து

    கஜா புயல் கரையை நெருங்கத் தொடங்கியதும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம் மற்றும் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் சூறாவளியுடன் மழை பெய்யத் தொடங்கியது. #Rain #Gajastorm #storm

    ராமநாதபுரம்:

    தமிழகத்தை கடந்த 7 நாட்களாக மிரட்டிக் கொண்டிருந்த ‘கஜா’ புயல் நேற்று நள்ளிரவு வேதாரண்யம்- கோடியக்கரை அருகே கடக்கத் தொடங்கியது.

    ‘கஜா’ புயல் கரையை நெருங்கத் தொடங்கியதும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம் மற்றும் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் சூறாவளியுடன் மழை பெய்யத் தொடங்கியது.

    நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. அதன்பின்னர் மழையின் அளவு சற்று குறையத் தொடங்கி விடிய விடிய சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர்ந்து மழை நீடிக்கிறது. புயல் காரணமாக ராமேசுவரம் கடல் உள்வாங்கியது.

    புயல் அறிவிப்பு எதிரொலியால் ராமேசுவரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. இதனால் ராமேசுவரம் வெறிச்சோடி காணப்பட்டது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் ஆள் நடமாட்டமே இல்லை. சுற்றுலா தலமான தனுஷ் கோடிக்கு செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அரசு வாகனங்கள் மற்றும் போலீசாரின் ரோந்து வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. மேலும் அந்தப்பகுதியில் உள்ள மீனவர்களும் வெளியேற்றப்பட்டதால் தனுஷ்கோடியில் இருந்து அரிச்சல் முனை வரை செல்லும் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. ராமேசுவரத்தில் இன்று குறைவான அளவு பஸ்களே இயக்கப்பட்டன.

    ராமேசுவரத்திற்கு நேற்று ரெயில்கள் இயக்கப்படவில்லை. இன்றும் 2-வது நாளாக மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரெயில், ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரெயில், திருச்சி- ராமேசுவரம், பயணிகள் ரெயில்கள் உள்பட 6 ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்னையில் இருந்து நேற்று மாலை 5.40 மணிக்கு புறப்பட்ட சென்னை-ராமேசுவரம் சேது எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னையில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்ட போர்ட்மெயில் ரெயில் ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. ரெயிலில் வந்த பயணிகள் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் மூலம் ராமேசுவரத்திற்கு அனுப்பப்பட்டனர்.

    ராமேசுவரம் பாம்பன் பாலத்தில் தொடர்ந்து காற்று வீசுவதால் இந்த ரெயில்கள் மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. இந்த ரெயில்கள் இங்கிருந்து இன்று மாலை சென்னை புறப்பட்டுச் செல்லும்.

    மேலும் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும் பயணிகள் ரெயில் மானாமதுரை-திருச்சி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம், கமுதி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பொதுமக்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ராமேசுவரம், திருவாடானை, கீழக்கரை, பரமக்குடி, கடலாடி, முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் உள்ள பாதுகாப்பு மையங்களில் 2,123 பேர் தங்க வைக்கப்பட் டுள்ளனர்.

    நேற்று இரவு 12 மணிக்கு நிறுத்தப்பட்ட பஸ்கள் இன்று காலை 6 மணிக்கு மீண்டும் இயக்கப்பட்டன. #Rain #Gajastorm #storm

    Next Story
    ×