search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அங்கீகாரம் ரத்து - அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை
    X

    புதுக்கோட்டை தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அங்கீகாரம் ரத்து - அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. #AnnaUniversity
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் செல்லும் சாலையில் லேணா விலக்கில் செந்தூரான் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் இக்கல்லூரியில் நடந்த செமஸ்டர் தேர்வில், அக்கல்லூரியை சேர்ந்த தாளாளரின் மகன், தனக்கு பதிலாக மற்றொரு மாணவரை தேர்வு மையத்திற்கு அனுப்பி தேர்வு எழுதியது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த கல்லூரியின் அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.



    இதேபோன்று மேலும் 3 கல்லூரிகளில் அதிக அளவில் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடந்த செமஸ்டர் தேர்வில் இந்த 3 கல்லூரிகளும் தங்களுடைய மாணவர்களுக்கு தேர்வு மையத்தில் கேள்விக்கான வினாக்களை புத்தகத்தை வைத்து பார்த்து எழுதவும், பிட் வைத்து எழுதவும் அனுமதித்துள்ளது தெரிய வந்துள்ளது.

    இந்த முறைகேடுகள் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, 3 கல்லூரிகள் மீதும் விசாரணை நடத்த குழு அமைத்து உத்தரவிட்டிருந்தார். அக்குழுவினர் இதன் மீதான விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய உள்ளனர். இதில் ஒரு கல்லூரி மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த கல்லூரிகளின் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த 3 கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் எந்த தேர்வுக்கும் மேற்பார்வையாளராக நியமிக்கப்படவும் அண்ணா பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.

    இந்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இனி மேல் தேர்வு நேரங்களில் மற்ற கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்களை பணியில் அமர்த்தி தேர்வுகளை கண்காணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த முறைகேடுகள் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முறையில் மேலும் பல அதிரடிகளை செய்துள்ளது. மறு மதிப்பீடு முறையிலும் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளில் விடைத்தாள்களை எதுவும் எழுதாமல் வீணாக்காமல் இருப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    செந்தூரான் கல்லூரி அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளதால் அக்கல்லூரியில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கிடையே அந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளை மற்ற கல்லூரிகளில் சேர்ப்பது குறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். #AnnaUniversity
    Next Story
    ×