search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலால் 29 பேர் உயிரிழப்பு - சுகாதார துறை செயலாளர் தகவல்
    X

    தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலால் 29 பேர் உயிரிழப்பு - சுகாதார துறை செயலாளர் தகவல்

    தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலால் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். #Dengue #SwineFlu
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வர உள்ளனர். இதனையொட்டி டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சுகாதாரத் துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கினார். இதை தொடர்ந்து திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் கந்தசாமி உள்பட அதிகாரிகள் உடன் சென்றனர்.

    இதையடுத்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெங்கு, பன்றிக் காய்ச்சல் மற்றும் பருவ காலங்களில் ஏற்படும் இதர காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அனைத்துத் துறை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக திருவண்ணாமலைக்கு அதிகளவில் மக்கள் கூட்டம் வர வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள்.

    அப்போது ‘மே ஐ ஹெல்ப் யூ’ மையத்தில் இருந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கவும், பொது இடங்களில் லைசால் மூலமாக சுத்தம் செய்யும், கை கழுவும் பழக்கத்தைப் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 108 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 6 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் உள்ளது. டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீரில் உருவாக வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பிலும், அரசு அலுவலகங்களிலும் தேவையற்று கிடக்கும் பொருட்களிலும் நல்ல தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் போலி மருத்துவர்களிடம் செல்லக் கூடாது. அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும். பன்றிக் காய்ச்சல் மற்றும் பருவகால காய்ச்சல்களை தடுத்திட தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பன்றி காய்ச்சலுக்கு ‘டாமி புளூ’ என்ற மருந்தை மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொண்டால் இந்த நோயை எளிதாக குணப்படுத்தலாம்.

    அரசு மருத்துவ நிலையங்களில் 19.75 லட்சம் ‘டாமி புளூ’ மாத்திரைகள் இருப்பில் உள்ளது. தனியார் மருத்துவமனையில் தேவைப்பட்டாலும் வாங்கி கொள்ளலாம்.

    கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை 23 ஆயிரத்து 900 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 66 பேர் உயிரிழந்து உள்ளனர்.



    இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 ஆயிரத்து 750 பேர் சிகிச்சை பெற்ற நல்ல நிலையில் வீடு திரும்பி உள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதேபோல் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை 3 ஆயிரத்து 800 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 1,100 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 17 பேர் உயிரிழந்து உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த பிரச்சினை இதுவரை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Dengue #SwineFlu
    Next Story
    ×