search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.ஐ.யில் வேலை பார்த்ததை அவமானமாக கருதுகிறேன்- முன்னாள் அதிகாரி ஆவேசம்
    X

    சி.பி.ஐ.யில் வேலை பார்த்ததை அவமானமாக கருதுகிறேன்- முன்னாள் அதிகாரி ஆவேசம்

    சி.பி.ஐ. ஆணையத்தில் வேலை செய்ததை அவமானமாக கருத விட்டுவிட்டார்கள் என்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அதிகாரி ரகோத்தமன் பேசினார். #CBI #CentralGovt
    சென்னை:

    சி.பி.ஐ. அமைப்பை மையப்படுத்தி சமீபத்தில் நடைபெறும் விவகாரங்கள் குறித்த கருத்தாய்வு கூட்டம் சென்னை ராயபுரத்தில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் சி.பி.ஐ. முன்னாள் அதிகாரி ரகோத்தமன், மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் சி.பி.ஐ. முன்னாள் அதிகாரி ரகோத்தமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சி.பி.ஐ. விவகாரத்தில் மோடி அரசின் தலையீடு அந்த அமைப்பின் நோக்கத்தையே சீர்குலைத்து விட்டது.

    நான் 36 வருடமாக சி.பி.ஐ.யில் பணி செய்துள்ளேன். இப்போது ஓய்வு பெற்றிருக்கும் போது நான் உழைத்த அமைப்பை இப்படி சின்னா பின்னமாக ஆக்குகிறார்களே என்ற ஆதங்கத்துடன் இருக்கிறேன். நான் சி.பி.ஐ. என்று வெளியே சொல்ல எனக்கு அவமானமாக உள்ளது.

    ஆளும் ஆட்சியாளர்கள் இந்தியாவின் நிர்வாகத்திறனை மாற்றிவிட்டார்கள் முக்கிய புலனாய்வு துறையின் தலைவரை மத்திய அரசு எப்படி மாற்றியது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. மக்களின் நம்பிக்கைக்குரிய புலன் விசாரணையில் இருந்த சி.பி.ஐ. ஆணையத்தை இன்று ஒரேயடியாக அழித்து விட்டது.

    எந்த குற்றவாளியை பிடிக்க வேண்டுமோ அந்த குற்றவாளிக்கு சாதகமாக மத்திய அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. நேர்மையான அதிகாரிகளை மாற்றி கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பா.ஜ.க.வினர் சி.பி.ஐ. ஆணையத்தை காங்கிரஸ் ஆணையம் என கூறினார்கள்.


    ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு தற்பொழுது மோசமான செயல்களில் ஈடுபட்டுவருகிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது. சி.பி.ஐ. ஆணையத்தை சுதந்திரமாக செயல்பட வைத்திருந்தால் இன்னும் பல வழக்குகளை விசாரித்து இருக்க முடியும்.

    ஆனால் அரசாங்கம் மோசமான செயலில் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது. சி.பி.ஐ. ஆணையத்தில் வேலை செய்ததை அவமானமாக செய்து விட்டார்கள். மரியாதை இல்லாமல் பிரிவினையை ஏற்படுத்தி அசிங்கப்படுத்தி விட்டார்கள்.

    தற்போது சி.பி.ஐ. அடையாளத்தை போடாத அளவிற்கு கேவலப்படுத்தி விட்டனர். நேர்மை நீதியை விட கடமையைச் செய்வதில் குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு அடிபணிந்து அடிமையாக இருக்கக் கூடாது என்று இருந்த நிலையினை பிரிவினையை ஏற்படுத்தி அசிங்கப்படுத்தி விட்டனர்.

    மாநில காவல்துறையை போன்று சி.பி.ஐ. ஆணையத்தில் ஒருவரை மாற்றுவது கடினமான ஒன்று. ஆனால் தற்போது அதை சாதாரணமாக செய்து விடுகிறார்கள். இதற்கெல்லாம் 12-ந் தேதி உயர்நீதிமன்றம் நீதி வழங்க வேண்டும். நீதியை நிலைநாட்டுகின்ற நீதித்துறை எவ்வித தடைகள் வந்தாலும் அடிமையாகாமல் கடமையை செய்யவேண்டும்.

    நீதித் துறை மீது நம்பிக்கை இழக்கும் அளவுக்கு நடந்து கொண்டால் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

    ஆட்சியாளர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் வங்கி கணக்கில் பணம் செலுத்துகிறேன். லஞ்சத்தை ஒழிப்பேன் என்று பேசிவிட்டு பதவிக்கு வந்தவுடன் நடைமுறையில் எதுவும் செய்யாமல் விக்ரமாதித்தன் வேதாளம் மரத்தில் ஏறியது போல தலைக்கனம் பிடித்து ஆடுகிறார்கள்.

    ஆட்சியில் இருப்பதிலேயே குறிக்கோளாக இருக்கிறார்களே தவிர மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. இந்தியா குடியரசு நாடாக இல்லை.

    சாதாரணமாக குற்றம் செய்தவர்களை குற்றவாளியாக மாட்டி வாட்டி எடுக்கும். மத்திய அரசு பதவியில் இருப்பவர்கள் மது கோடி கோடியாய் ஊழல் குற்றசாட்டு இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லையே என்று சாதாரண மக்கள் கூட கேட்கும் நிலைமைக்கு ஆக்கிவிட்டார்கள்.

    நேர்மையாக பணியாற்றி தனித்தன்மையாக அதிகாரத்தை பயன்படுத்தாமல் தடுத்து விட்டதால் இனிமேல் சி.பி.ஐ. என்பதை எடுத்து விட்டு பெயரை மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #CBI #CentralGovt
    Next Story
    ×