search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு- பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தம்

    கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும், விவசாய பாசனத்துக்கும் முதன்மையாக நீர் ஆதாரமாக விளங்குகிறது.

    கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி முதல் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் ஏரி நிரம்பி வழிந்தது. இதையடுத்து வீராணம் ஏரியில் இருந்து ஆகஸ்ட் 11-ந் தேதியில் இருந்து சென்னைக்கும், விவசாய பாசனத்துக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதற்கிடையே மழை பெய்யாததாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. நேற்று 690 கன அடி தண்ணீர் வந்தது. இன்று அது சற்று அதிகரித்து 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர்மட்டமும் மீண்டும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று நீர்மட்டம் 43.70 அடியாக இருந்தது. இன்று அது 43.95 அடியாக உயர்ந்துள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று முதல் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு அனுப்பப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இன்றும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இருப்பினும் சென்னைக்கு தொடர்ந்து 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இதேப்போல் தொடர்ந்து மழை பெய்தால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயரும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #VeeranamLake
    Next Story
    ×