search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை
    X

    குமரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை

    குமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதலே மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இரவு விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது.

    நாகர்கோவில்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

    குமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதலே மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இரவு விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது.

    நாகர்கோவிலில் நேற்று இரவு முதலே விட்டு, விட்டு மழை பெய்தது. இன்று காலையிலும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    கோழிப்போர்விளை பகுதியில் சுமார் 2 மணி நேரமாக கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. அங்கு அதிகபட்சமாக 70 மி.மீ. மழை பதிவானது.

    மயிலாடி, கொட்டாரம், குளச்சல், ஆனைக்கிடங்கு, ஆரல்வாய்மொழி, சுருளோடு, பூதப்பாண்டி, முள்ளங்கினாவிளை, புத்தன் அணை உள்பட அதன் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு, குளு சீசன் நிலவுகிறது.

    திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் குடும்பத்தோடு அங்கு குவிந்து இருந்தனர்.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் கொட்டித்தீர்த்த கனமழையினால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    பெருஞ்சாணி அணை மீண்டும் நிரம்பி வருவதை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.95 அடியாக இருந்தது. அணைக்கு 431 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக் கிறது. அணையில் இருந்து 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 27.40 அடியாக இருந்தது. அணைக்கு 696 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    Next Story
    ×