search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள்- எடப்பாடி பழனிசாமி பேட்டி
    X

    ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள்- எடப்பாடி பழனிசாமி பேட்டி

    முக ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். #edappadipalanisamy #mkstalin

    மதுரை:

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111-வது ஜெயந்தி விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் அடுத்த வினாடியே ஜெயிலுக்கு போவார்கள். அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் உள்ளன என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று அவர் கனவு காண்கிறார். அது நடக்காது. ஆனால் மு.க.ஸ்டாலின் மற்றும் அவர்களுடைய முன்னாள் அமைச்சர்கள் அதுவரைக்கும் வெளியில் இருப்பார்களா? என்று பாருங்கள்.

    ஏனென்றால் அவர் ஒரு முடிவுக்கு வந்து விட்டார். ஏற்கனவே தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டதால் அவர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வழக்குகளை மறைப்பதற்காக அ.தி.மு.க. அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வழக்கு தொடருவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

    அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது என்ன வழக்கு தொடரப்போகிறார்? என்று எனக்கு தெரியவில்லை. ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். எங்களுக்கு மடியிலே கனமில்லை, வழியிலே பயமில்லை. எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி பார்க்கிறார்.

    மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினருக்கு தான் பயம் இருக்கிறது. ஏற்கனவே தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், அமைச்சர்கள் மீதான வழக்கு தனி கோர்ட்டில் இப்போது விசாரணையில் இருக்கிறது. அந்த விசாரணையில் கூட முதன் முதலில் மு.க.ஸ்டாலின் தான் விசாரிக்கப்பட்டார்.


    எனவே ஸ்டாலின்- முன்னாள் அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்களே தவிர, அ.தி.மு.க. அமைச்சர்கள் பற்றி அவர் தெரிவித்துள்ள யூகங்கள் ஒரு போதும் வெற்றி பெறாது.

    என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு கூட பொய்யானது. அதனால் தான் நான் உச்சநீதிமன்றத்தில் என்னுடைய சார்பாக வக்கீல்களை வைத்து வாதாடினேன். அந்த அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு, தி.மு.க.வினர் தொடர்ந்த வழக்கை தடை செய்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #edappadipalanisamy #mkstalin 

    Next Story
    ×