search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பன்றிக் காய்ச்சலால் பலியான நஸ்ருதீன்.
    X
    பன்றிக் காய்ச்சலால் பலியான நஸ்ருதீன்.

    தஞ்சை, திருவாரூரில் டெங்கு காய்ச்சலால் 6 பேர் பாதிப்பு - பன்றி காய்ச்சலுக்கு வியாபாரி பலி

    தஞ்சை, திருவாரூரில் டெங்கு காய்ச்சலால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கும்பகோணத்தில் பன்றி காய்ச்சலுக்கு வியாபாரி பலியானார். #Denguefever #Swineflu
    தஞ்சாவூர்:

    தமிழகம் முழுவதும் தற்போது வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனவே டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஏராளமான புற நோயாளிகள் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று சென்று திரும்புகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் குழந்தைகளுக்காக 27 படுக்கைகளும், பெரியோருக்கு 37 படுக்கைகளும் கொண்ட தனித்தனி சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வார்டுக்கு 3 மருத்துவர்கள், 10 செவிலியர்கள் அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே தற்போது 7 பேர் வைரஸ் காய்ச்சல் காரணமாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் தஞ்சையை சேர்ந்த கல்லூரி மாணவர் அல்ரோஸ் (வயது 18). கும்பகோணத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தாமஸ் (40) மற்றும் திருவாரூர் மாவட்டம் மன்னர்குடியை சேர்ந்த ராஜா (30) ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் தனியாக ஒதுக்கப்பட்டுள்ள வார்டில் தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இவர்களை சிறப்பு டாக்டர்கள் குழு கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள காய்ச்சல் பிரிவில், திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 40 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இவர்களில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த குணா (22), பொன்னிறையைச் சேர்ந்த விக்னேஷ் (24), குடவாசல் பகுதியை சேர்ந்த அரவிந்த்சாமி (28), ஆகிய 3 பேருக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களை தொடர்ந்து டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கும்பகோணம் பட்டாச்சாரியார் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நஸ்ருதீன் (45). இவர் மளிகை கடை நடத்தி வந்தார். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அப்போது நஸ்ருதீன் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்று மருத்துவ மனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்துக்கு நேற்று நஸ்ருதீன் உடல் கொண்டு செல்லப்பட்டது.

    தற்போது கும்பகோணம் நகராட்சி பணியாளர்கள் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். #Denguefever #Swineflu



    Next Story
    ×