search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனமழையால் கொடைக்கானல் மலைச்சாலையில் நிலச்சரிவு
    X

    கனமழையால் கொடைக்கானல் மலைச்சாலையில் நிலச்சரிவு

    கனமழை காரணமாக பழனி - கொடைக்கானல் மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பழனி:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது. பெருமாள் மலை, மச்சூர், வாழைகிரி, வடகரைப்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் கொடைக்கானல் - வத்தலக்குண்டு மலைச் சாலையில் டம்டம் பாறை அருகே மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன.

    இதனால் மலைப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சாலையின் நடுவே விழுந்த பாறை பெரியதாக இருந்ததால் அதனை வெடி வைத்து தகர்த்து அப்புறப்படுத்தினர்.

    மேலும் வாழைகிரி, ஊத்து, மேல்பள்ளம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவையும் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

    இதே போல் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலைப்பாதை 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட குறுகலானதும், ஆபத்தான மலைப்பாதையையும் கொண்டது. இந்த சாலை வனப்பகுதியின் நடுவே செல்வதால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது.

    மேலும் இப்பகுதியில் மழைக்காலங்களில் நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழும் சம்பவம் நடப்பது உண்டு. நேற்று இச்சாலையில் சவரிக்காடு என்ற இடத்தில் பெரியபாறை உருண்டு விழுந்து மரங்களும் முறிந்து விழுந்தது. இதனால் பழனியில் இருந்து கொடைக்கானல் நோக்கி வந்த வாகனங்கள் பெருமாள் மலை வழியாக மாற்றுப்பாதையில் சென்றன. சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர் நீண்ட நேரம் போராடி தற்காலிகமாக சாலையின் நடுவே விழுந்த பாறையை அகற்றினர்.

    தொடர் விடுமுறைக்காக கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இந்த சாலையில் ஏற்பட்ட நீண்ட நேரம் போக்குவரத்து நெருக்கடி ஒரு வழியாக மாலையில் சீரானது. கொடைக்கானல் செல்லும் மலைச்சாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×