search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நடப்பதால்தான் தினமும் மழை பெய்கிறது - அமைச்சர் செங்கோட்டையன்
    X

    தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நடப்பதால்தான் தினமும் மழை பெய்கிறது - அமைச்சர் செங்கோட்டையன்

    தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நடப்பதால்தான் தினமும் மழை பெய்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #ADMK #MinisterSengottaiyan

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி பெரியார்திடலில் அதிமுக வின் 47-வது ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு, பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசியதாவது:-

    பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சியில்தான் சத்துணவுத்திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

    அதைத் தொடர்ந்து ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொட்டில் குழந்தை திட்டம், மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், லேப்டாப் வழங்கும் திட்டம், உள்ளிட்ட பல என்னற்ற திட்டங்களைக் கொண்டு வந்து தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கினார்.

    அவர் மறைந்த பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான இந்த ஆட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நிறைவேற்றி வருகிறது. அதிமுகவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் வரை இக்கட்சியை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.


    அதிமுகவில் சாதாரண தொண்டர்கள் கூட மிகப்பெரிய பதவிக்கு வரலாம் என்ற நிலை உள்ளது. திமுக போல குடும்ப அரசியல் அதிமுகவில் இல்லை. திமுக ஆட்சி காலத்தில் தமிழகம் மின்வெட்டால் இருண்டு கிடந்தது. மின்வெட்டை கண்டு பிடித்தவர் அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆவார். இந்த ஆட்சியில் அனைவருக்கும் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு, மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. திருப்பரங்குன்றம், திருவாரூர் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறும். துணிச்சல் இருந்தால் தி.மு.க. தனியாக போட்டியிட தயாரா?

    தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான நல்ல ஆட்சி நடைபெறுவதால் தான் தினமும் மழை பெய்து கொண்டு இருக்கிறது. விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் கல்வித்துறையில் வரும் மார்ச் மாதத்திற்குள் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. மேலும், 3ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் துவங்கப்படும். பிளஸ் 2 முடித்தவுடன் வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய கல்வி வழங்கப்படும்.

    1 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் சீருடைகள் மாற்றம் செய்யப்படும். கோபியில் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளது. மேலும், அத்தாணி-சத்தி சாலை, ஈரோடு -நீலகிரி சாலை, கோபி -பெருமாநல்லூர் சாலை ஆகியவை 4 வழிச்சாலைகளாக மாற்றப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். #ADMK #MinisterSengottaiyan

    Next Story
    ×