search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என் உறவினர் யாருக்கும் காண்டிராக்ட் வழங்கவில்லை- முதலமைச்சர் பழனிசாமி
    X

    என் உறவினர் யாருக்கும் காண்டிராக்ட் வழங்கவில்லை- முதலமைச்சர் பழனிசாமி

    தி.மு.க. கூறுவது பொய் புகார் என்றும் தன் உறவினர் யாருக்கும் காண்டிராக்ட் வழங்கவில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #ADMK #Edappadipalaniswami #MKStalin
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உளுந்தூர் பேட்டையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி லஞ்ச ஒழிப்பு துறையில் என் மீது ஒரு புகார் செய்தார். அது முழுக்க முழுக்க ஒரு பொய் புகார். அதை வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். எனது உறவினருக்கு நான் ஒப்பந்தம் கொடுத்ததாக கூறுவது ஒரு பொய் தகவல். 1968-ல் யார் யாரெல்லாம் உறவினர், யார் யாருக்கெல்லாம் ஒப்பந்தம் கொடுக்கப்படலாம் என்று ஒரு விதி வகுக்கப்படுகிறது.

    அதில் இவர் வருவதில்லை. ரத்தம் சம்பந்தப்பட்ட உறவு என்று சொன்னால், என்னுடைய அப்பா, அம்மா, அந்தத் துறையினுடைய அமைச்சர், அவருடைய மகன், மகள் இவர்கள்தான். அதுமட்டுமல்ல, நிறைய உறவினர் என்று வரும்பொழுது அந்த இலாக்காவினுடைய அமைச்சர், அவருடைய அப்பா, அம்மா, அவருடைய மனைவி, மகன், மகள், மகளுடைய கணவர், மகனுடைய மனைவி, அதுமட்டுமல்லாமல், அந்த அமைச்சருக்கு இரண்டாம் தாரமாக மனைவி இருந்தால் அந்த மனைவி, அவருடைய மகன், மகள், அந்த அமைச்சர் ஏதாவது மகனையோ, மகளையோ தத்து எடுத்திருந்தால், அவர்கள். இதுதான் நெருங்கிய உறவினர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் எதிலும் அவர் வருவதில்லை.

    ஆகவே, எப்படி நெருங்கிய உறவினருக்கு டெண்டர் கொடுத்தேன் என்று சொல்வது. இந்த ராமலிங்கம் அன் கோ 35 ஆண்டுகளுக்கு முன்பே பணி செய்து கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சிக் காலத்திலேயே 10 டெண்டர் அவருக்கு வழங்கியிருக்கிறார்கள். 5 டெண்டர் வழங்கியிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க உலக வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. எந்த முறைகேடும் இல்லை. அதிகமாக பணம் கொடுத்திருக்கின்றோம் என்கிறார்கள்.

    அதுவும் அல்ல. ஆர்.எஸ்.பாரதி, ஒரு கிலோ மீட்டருக்கு 2 கோடியே 20 லட்சம் ஆகும் என்று சொல்கிறார். அவருடைய ஆட்சியில், டி.ஆர்.பாலு, மந்திரியாக இருந்தபோது சேலம்குமாரபாளையம் 4 வழிச்சாலைக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.8 கோடியே 78 லட்சம் செலவு செய்திருக்கிறார். 2006ல் டெண்டர் ஆரம்பித்து 2010ல் முடிந்திருக்கிறது. அதற்குப் பிறகு குமாரபாளையம்செங்கம் சாலை, ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.7 கோடியே 83 லட்சம் செலவு செய்திருக்கிறார். 2006-ம் ஆண்டு துவங்கப்பட்டு, 2009-ம் ஆண்டு முடிந்திருக்கிறது.

    அதேபோல, சென்னை பைபாஸ்-ல் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.12 கோடியே 42லட்சம் செலவு செய்திருக்கிறார். 2005ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 2020-ம்ஆண்டு முடிந்திருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு தொகை செலவு செய்திருக்கின்றார்கள் என்றால், 10 ஆண்டுகளில் ஒரு வருடத்திற்கு 5 சதவீதம் விலையேறினால்கூட இன்றைக்கு 50 சதவீதம் விலையேறியிருக்கும். அப்படிப் பார்த்தால், இன்றைக்கு நான்கு வழிச்சாலைக்கு நாங்கள் ஒரு கிலோமீட்டருக்கு ரூபாய் 10.16 கோடி தான் ஒதுக்கியிருக்கின்றோம். அப்படியானால் யார் ஊழல் செய்தார்கள் என்று நன்றாகத் தெரியும்.

    தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் 4 டெண்டர் விட்டார்கள். 611.07 கோடிக்கு டெண்டர் விட்டுவிட்டு , கூடுதலாக 161.67 கோடிக்கு கொடுத்திருக்கிறார்கள். 161.67 கோடியை வேலை செய்ய ஏதோ ஒரு வகையில் போட்டுபோட்டு பணத்தை கொடுத்திருக்கிறார்கள். ஆக மொத்தம் அவர்கள் காலத்தில். 26.43 கோடி அதிகம் கொடுத்திருக்கிறார்கள் அதேபோல நாகப்பட்டினம் முதல் கட்டுமாவடி வரை உள்ள சாலை மேம்படுத்துவதற்காக 198.77 கோடி மதிப்பிற்கு டெண்டர் விட்டார்கள். அதில் கூடுதலாக, டெண்டர் விட்ட பிறகு 72.49 கோடி கொடுத்திருக்கிறார்கள். அதில் 36.4 சதவீதம் அதிகமாக கொடுத்திருக்கிறார்கள்.

    ஆக, அவருடைய ஆட்சிக் காலத்தில் தான் ஊழல் நடந்திருக்கிறது, எங்கள் ஆட்சிக்காலத்தில் அல்ல. சட்டத்துறை அமைச்சர் சொல்கின்றதைப் போல, இதையெல்லாம் தோண்டி எடுக்கின்றபோதுதான் இந்த உண்மைகள் எல்லாம் வெளியில் வரும். இதுபற்றி சட்ட ரீதியான நடவடிக்கையை அரசு எடுக்கும்.

    புதிய தலைமைச் செயலகம் திமுக ஆட்சியில் கட்டினார்கள். முதலில் 8 லட்சம் சதுரஅடி கட்ட வேண்டுமென்று டெண்டர் கோரப்பட்டது, அதற்காக 200 கோடி ஒதுக்கினார்கள். அப்புறம் 262 கோடி ஆக்கினார்கள், அப்புறம் 84 கோடி சேர்க்கிறார்கள், 347 கோடி ஆகியது. அதனால், அதில் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்று சொல்லி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு ஆணையம் அமைத்தார்கள். அந்த ஆணையம் விசாரிக்கக் கூடாது என்று அப்போது திமுக தலைவர் கருணாநிதி நீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கிவிட்டார். இதனால் அந்த ஆணையம் செயல்பட முடியவில்லை.

    அதற்குப் பிறகு நீதியரசர் முடங்கியிருக்கின்ற அந்த ஆணையத்தை நீங்கள் முடித்துவிடுங்கள், அந்த புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து நீங்கள் விசாரிக்கலாம் என்று ஒரு தீர்ப்பை கொடுத்தார். அதன் அடிப்படையில் அந்த ஆணையம் கலைக்கப்பட்டது, அந்த ஆணையத்தின் தலைவர் ராஜினாமா செய்துவிட்டார். உடனே ஸ்டாலின் அதற்கும் தடையாணை வாங்கிவிட்டார். நாங்கள் உண்மையாக இருக்கிறோம், தர்மமாக இருக்கிறோம், நாங்கள் எந்த தப்பும் செய்யவில்லை என்று சொல்கிறார்.


    தப்பு செய்யாதவர் ஏன் தடையாணை வாங்குகிறீர்கள்? கருணாநிதி இருந்தபோதும் நான்காண்டு காலம் அந்த ஆணையம் செயல்பட முடியாமல் தடையாணை வாங்கினார்கள், அப்புறம் நீதிபதி இதை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்ட பிறகு, அதற்கு ஏன் தடையாணை வாங்குகிறீர்கள்? நீங்கள் தப்பு செய்யவில்லை என்றால் வழக்கிற்கு ஒத்துழைக்க வேண்டுமல்லவா? என்மீது புகார் தொடர்ந்தார்கள், நான் அதை சந்திக்கவில்லையா? எங்களிடத்தில் மடியிலே கனம் இல்லை, வழியிலே பயம் இல்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Edappadipalaniswami #MKStalin
    Next Story
    ×