search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது- பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது- பொன்.ராதாகிருஷ்ணன்

    நாட்டில் உள்ள சர்வ கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் 2019-ல் மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். #BJP #PonRadhakrisnan #PMModi
    கரூர்:

    கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் பா.ஜ.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. கார் வேந்தன் முன்னிலை வகித்தார். இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    4 ஆண்டுகள் எந்த ஊழல் குற்றச்சாட்டும் சுமத்தாத எதிர்கட்சிகள் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் பா.ஜ.க. மீது ஊழல் குற்றம் சுமத்துகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் மாதம் ஒரு ஊழல் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு தூக்கம் வராது. ஆனால் ஒரு ஊழல் கூட செய்யாத பா.ஜ.க. ஆட்சி மீது பொய்குற்றச்சாட்டினை வைக்கிறார்கள்.

    சபரிமலை அய்யப்ப சுவாமி கோவில் தவிர்த்து, நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான அய்யப்ப சுவாமி கோவில்களுக்கு பெண்கள் சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    எந்த காலத்திலும் நமது வாழ்க்கை முறையில் பெண்களை ஒதுக்கவில்லை. அய்யப்ப சுவாமி கோவில் அமைந்திருக்கும் காட்டுப் பகுதி, சுயகட்டுப்பாடு போன்ற காரணங்களால் குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. மத நம்பிக்கைகளை தகர்க்க கம்யூனிஸ்டு கட்சிகள் எண்ணுகிறது. அதற்கு காங்கிரஸ் துணை போகிறது.

    50 ஆண்டு திராவிட கட்சிகள் ஆட்சியில் தமிழ்நாடு முன்னேறவில்லை. மக்கள் கேட்காத இலவசங்களையும், டாஸ்மாக் மது பானங்களையும் கொடுத்து மக்களை ஒரு வித மோகத்தில் வைத்து ஆட்சி செய்கிறார்கள். ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான தி.மு.க-காங்கிரஸ் கட்சிக்கு மானமுள்ள தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

    2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி விடலாம் என பல்வேறு அரசியல் கட்சிகள் கற்பனையில் இருக்கின்றன. கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும், நாட்டில் உள்ள சர்வ கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் 2019-ல் மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrisnan #PMModi
    Next Story
    ×