search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக பிரமுகரின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை
    X

    அதிமுக பிரமுகரின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை

    மன்னார்குடியில் அதிமுக பிரமுகரின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #ADMK
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் பகுதியை மனோகரன். அரசு முதல் நிலை ஒப்பந்தக்காரரான இவர் அ.தி.மு.க. சேரன்குளம் கிளை செயலாளராக இருந்து வருகிறார். மேலும் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனராகவும் இருந்து வருகிறார்.

    இவருக்கு சொந்தமாக மன்னார்குடியில் லாட்ஜ், பெட்ரோல் பங்க், மற்றும் நீடாமங்கலத்தில் சிமெண்டு கலவை ஆலை, தஞ்சை மாவட்டம் திருக்கருக்காவூரில் திருமண மண்டபம் ஆகியவை உள்ளன.

    தமிழகம் முழுவதும் மனோகரன் பல்வேறு ஒப்பந்தப்பணிகளை பெற்று செய்து வருகிறார். குறிப்பாக திருவாரூர்- திருத்துறைப்பூண்டி இடையே அகலரெயில் பாதை பணிக்கு மண்கொட்டி சமன்படுத்தும் பணியை ஒப்பந்தம் செய்து தற்போது செய்து வருகிறார்.

    இந்த நிலையில் மன்னார்குடி 6-வது தெருவில் உள்ள மனோகரனின் வீட்டுக்கு நேற்று காலை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இதேபோல் மன்னார்குடி கீழராஜவீதியில் உள்ள லாட்ஜ், பெட்ரோல் பங்க், கம்மாள தெருவில் உள்ள அவரது அலுவலகம், திருக்கருகாவூரில் உள்ள திருமண மண்டபம் உள்ளிட்ட 6 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது. திருச்சி வருமான வரித்துறை உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் தஞ்சை, நாகையை சேர்ந்த வருமானவரித்துறையினர் அலுவலர்கள் சுமார் 40 பேர் இந்த சோதனையை நடத்தினர்.

    நேற்று காலை 11 மணி தொடங்கிய சோதனை இரவு 10 மணி வரை நீடித்தது. தொடர்ந்து 11 மணி நேரமாக நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தெரிகிறது. ஆனால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பற்றி வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

    இந்த நிலையில் இன்றும் 2-வது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை நடந்தது.

    இன்று காலை 7 மணியளவில் மன்னார்குடி கம்மாள தெருவில் உள்ள மனோகரனின் அலுவலகத்தில் இந்த சோதனை நடந்தது. இதில் 30 அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக சென்று சோதனை நடத்தினர். சோதனை நடந்த போது அலுவலகத்தின் முன்பக்க கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டனர். யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

    பாதுகாப்புக்காக அலுவலகம் முன்பு போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    பின்னர் காலை 9-15 மணியளவில் மனோகரனின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையை முடித்து கொண்டனர். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை 5 பைகளில் வைத்து கட்டினர். பிறகு அந்த ஆணவங்கள் அனைத்தும் திருச்சி வருமானவரித்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்ல புறப்பட்டு சென்றனர்.

    இதையடுத்து கைப்பற்ற ஆவணங்கள் பற்றி விசாரணை நடத்த மனோகரனுக்கு வருமான வரித்துறையினர் விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளனர் என்று கூறப்படுகிறது.

    இன்று மனோகரனின் அலுவலகத்தில் மட்டுமே சோதனை நடந்தது. அவரின் வீடு- லாட்ஜ் மற்றும் பெட்ரோல் பங்கில் சோதனை நடைபெறவில்லை. #ADMK
    Next Story
    ×