search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் கொடுத்தும் கவர்னர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ராமதாஸ் கேள்வி
    X

    அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் கொடுத்தும் கவர்னர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ராமதாஸ் கேள்வி

    அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் கொடுத்தும் கவர்னர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். #Ramadoss #Governor

    பொன்னேரி:

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அரசியல் விழிப்புணர்வு பொதுக் கூட்டம் பொன்னேரியில் நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    வாக்காளர்கள் நேர்மையான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். வாக்குக்கு பணம் கொடுக்க வரும் வேட்பாளரிடம் இந்த பணம் எப்படி வந்தது? என்று கேள்வி எழுப்ப வேண்டும்.

    தற்போது உள்ள தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஊழல் செய்து சேலம் மலை, திருவண்ணாமலை போன்று மலையளவு பணத்தை குவித்து வைத்துள்ளனர். கும்மிடிப்பூண்டியில் இருந்து கன்னியாகுமரி வரை சாலை வழியே 10 அடி உயரத்திற்கு 2000ரூபாய் நோட்டுக்களை அடுக்கி வைக்கும் அளவிற்கு அமைச்சர்கள் ஊழல் செய்து சொத்து சேர்த்து வைத்துள்ளனர்.

    மக்கள் நல்வாழ்வு, சாலை, சுகாதாரம், பாதாள சாக்கடை திட்டம், கல்வி உள்ளிட்டவற்றுக்கு செலவு செய்ய வேண்டிய தொகையில் 75 சதவீதம் கொள்ளையடித்து ஊழல் செய்து விடுகின்றனர்.

    கடந்த ஆண்டில் 600 மதுக்கடைகளை திறந்தது இந்த ஆட்சியின் அவலம். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஊழலில் 3-வது இடத்தை பிடித்து தமிழக அரசு சாதனை படைத்துள்ளனர்.

    அமைச்சர்கள் மீதான ஊழல்கள் குறித்து பா.ம.க. சார்பில் கவர்னரிடம் ஊழல் பட்டியல் வழங்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    காமராஜர் போன்று தமிழகத்திற்கு பெருமை தேடி தந்த முதல்வர்கள் இருந்த நிலைமாறி சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்வர் ஆளாகியுள்ளது வெட்கக்கேடு. அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    விவசாயத்திற்கு இடு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுவதில்லை, விதைகள் கிடைப்பதில்லை. ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் செயல்படாமல் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில துணைப்பொதுசெயலாளர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் குபேந்திரன் மாநில தலைவர் ஜி.கே.மணி. முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, நடிகர் ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Ramadoss #Governor

    Next Story
    ×