search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர்
    X

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தன்று பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி, தாசில்தார் ஆகியோர் சி.பி.ஐ. முன்பு ஆஜரானார்கள். #ThoothukudiProtest #SterliteProtests #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந்தேதி மக்கள் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், சிப்காட், புதுக்கோட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் மொத்தம் 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் சி.பி.ஐ. சூப்பிரண்டு சரவணன் தலைமையில் துணை சூப்பிரண்டு ரவி மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு தூத்துக்குடிக்கு வந்தது. இந்த குழுவினர் தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்துகின்றனர்.

    தற்போது சம்பவம் நடந்த இடங்களில் ஆய்வு மற்றும் ஆவணங்கள் சேகரிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போலீஸ் நிலையங்களில் ஆவணங்களை ஆய்வு செய்தனர். சம்பவ விவரங்களையும் கேட்டறிந்தனர்.

    நேற்று சூப்பிரண்டு சரவணன், துணை சூப்பிரண்டு ரவி ஆகியோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலையிடம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்த இடம், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட இடம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டனர்.

    தொடர்ந்து தூத்துக்குடி இந்திய உணவுக்கழக குடோன் ரவுண்டானா உள்ளிட்ட துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அதேபோன்று சம்பவம் தொடர்பாக புகார் அளித்த துணை தாசில்தார், தாசில்தார் ஆகியோரையும் வரவழைத்து சம்பவ விவரங்களை கேட்டறிந்தனர். இன்றும் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது துப்பாக்கி சூடு சம்பவத்தன்று பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி. ஆகியோர் சி.பி.ஐ. முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து துணை தாசில்தார் சேகரும் சி.பி.ஐ. முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்றும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட்டனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். #ThoothukudiProtest #SterliteProtests #ThoothukudiShooting #CBI
    Next Story
    ×