search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசுக்கு பயந்து திருப்பதி கோவிலில் பதுங்கி இருந்தேன் - கைதான ரவுடி பினு வாக்குமூலம்
    X

    போலீசுக்கு பயந்து திருப்பதி கோவிலில் பதுங்கி இருந்தேன் - கைதான ரவுடி பினு வாக்குமூலம்

    போலீசுக்கு பயந்து திருப்பதி கோவிலில் பதுங்கி இருந்ததாக பிரபல ரவுடி பினு வாக்குமூலம் அளித்துள்ளார். #Binu #RowdiBinu

    கும்மிடிப்பூண்டி:

    சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி பினு. மாங்காடு அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கூட்டாளிகளுடன் சேர்ந்து அரிவாளால் ‘கேக்’ வெட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

    போலீசாரால் கைது செய்யப்பட்ட பினு, ஜாமீனில் வெளியே வந்த பின்னர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு அடுத்த தாணிப்பூண்டியில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த ரவுடி பினுவையும் அவரது கூட்டாளியான ராணிப்பேட்டையை சேர்ந்த ரவுடி ஜெயபிரகாசையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு இருந்த 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    திருவள்ளூர் மாவட்ட போலீசாரிடம் ரவுடி பினு, சிக்கியது பற்றி அறிந்ததும் மாங்காடு போலீசார், பாதிரிவேடு போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து மேலும் விசாரணை மேற்கொண்டனர்.

    போலீஸ் விசாரணையில் ரவுடி பினு அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    என்னுடைய 50-வது பிறந்த நாளை பூந்தமல்லி அடுத்த மலையப்பாக்கம் பாலத்தின் கீழ் விமரிசையாக கொண்டாடிய போது, நான் குடிபோதையில் அரிவாளால் ‘கேக்’ வெட்டினேன். அந்த போட்டாவை வெளியே விட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர். நான் ஒன்றும் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை.

    இதனையடுத்து என்னை போலீசார் தேடி வந்தனர்.. போலீசாரின் தேடுதலுக்கு பயந்துபோன நான், சென்னை மாங்காடு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தேன்.

    பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவுடன், மீண்டும் போலீசார் பிடித்து விடுவார்கள் என்று பயந்து வேளாங்கண்ணி கோவிலிலும், திருப்பதி மலைக்கோவிலிலும் தங்கி இருந்தேன்.

    எனக்கும் வேலூர் சிறையில் இருந்த பிரகாஷ் என்ற ஜெய பிரகாஷ் என்ற பிரகாசுக்கும் (23) சிறையில் இருக்கும் போது நட்பு ஏற்பட்டது. அவனும் நானும், ஆந்திர மாநிலம் சத்யவேடு பகுதியில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்து வந்தோம்.

    இது தவிர பாதிரிவேடு அருகே உள்ள தாணிப்பூண்டியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் யாருக்கும் தெரியாமல் பொழுதை கழித்து வந்தோம்.

    எங்களிடம் குடிக்க பணம் இல்லாததால் தாணிப்பூண்டி பஸ் நிறுத்தம்அருகே மோட்டார் சைக்கிளில் வந்த முதியவர் ஒருவரை கத்தி முனையில் மடக்கி அவரிடம் இருந்து ரூ. 500 பணத்தை பறித்தோம். இதனால் போலீசில் சிக்கிக் கொண்டோம்.

    இவ்வாறு ரவுடி பினு வாக்கு மூலத்தில் கூறி உள்ளான்.

    இதற்கிடையில் மாதர் பாக்கம் என்.எஸ்.நகர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ரத்தினம் என்பவரை கத்தி முனையில் வழிமறித்து பணம் பறித்ததாக ரவுடி பினு, அவரது கூட்டாளி ஜெயபிரகாஷ் மீது பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    இதில் அவர்கள் மீது கொலை முயற்சி உள்பட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பினுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    Next Story
    ×