search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடன் தொல்லையால் கள்ளநோட்டு அச்சடித்தோம் - கைதான பெண் வாக்குமூலம்
    X

    கடன் தொல்லையால் கள்ளநோட்டு அச்சடித்தோம் - கைதான பெண் வாக்குமூலம்

    கள்ளநோட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட பெண் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கடன் தொல்லையால் கள்ளநோட்டு அச்சு அடித்ததாக கூறியுள்ளார். #FakeCurrency #arrest

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் வனிதா (வயது 30).

    இவர் நேற்று முன்தினம் அமைந்தகரை மேத்தாநகர் ரெயில்வே காலனி 3-வது தெருவில் உள்ள மருந்துக் கடையில் 2000 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்றார்.

    அப்போது மருந்து கடை ஊழியர்களும், அக்கம் பக்கத்தினரும் வனிதாவை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    அமைந்தகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வனிதாவை கைது செய்து விசாரணை நடத்தினார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கொளத்தூரை சேர்ந்த சத்தியலட்சுமி என்ற பெண்ணையும் கைது செய்தனர்.

    சத்தியலட்சுமி வீட்டில் கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை பயன்படுத்தி கள்ளநோட்டு தயாரித்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கள்ளநோட்டு வழக்கில் கைதான வனிதா போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-

    நானும் சத்யலட்சுமியும் கடந்த 2006-ம் ஆண்டு அண்ணா நகரில் உள்ள துணிக் கடை ஒன்றில் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம்.

     


    பிறகு சத்யலட்சுமி திருமணம் முடிந்து மாதவரம் பகுதியில் குடியேறிவிட்டார். அதன்பிறகு அவர் வேலைக்கு வரவில்லை. அவரது கணவர் அமெரிக்காவில் ஷிப்பிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அடிக்கடி நாங்கள் இருவரும் சந்தித்து பேசுவது வழக்கம்.

    நான் பின்னர் சேலை, பெட்ஷீட் மற்றும் தலையணை வியாபாரம் செய்து வந்தேன். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. கடன் பிரச்சினையால் தவித்து வந்தேன்.

    எனது தாய் அண்ணா நகர் சாந்தி காலனி பகுதியில் தள்ளுவண்டி டிபன் கடை நடத்தி வருகிறார். போதிய வருமானம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தோம்.

    இந்த நிலையில் தான் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு யூடியூப் மூலம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் வீடியோ ஒன்றை பார்த்தேன்.

    இதுகுறித்து சத்யலட்சுமியிடம் கலந்து ஆலோசித்து அவரிடம் இருந்து பண உதவி பெற்று ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து நோட்டு அச்சடிக்கும் மெஷின்கள் வாங்கினேன்.

    பின்னர் சத்யலட்சுமி மூலம் அவர் வசித்து வரும் வீட்டின் அருகில் 18-வது குறுக்கு தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தனியாக குடியேறினேன்.

    கடந்த 10 நாட்களாக ரூபாய் நோட்டு அச்சிட்டு வந்தேன். தினமும் நானும் சத்யலட்சுமியும் ஆளுக்கொரு சூப்பர் மார்க்கெட் கடைக்கு சென்று பணத்தை மாற்றி செலவு செய்து வந்தோம்.

    நேற்று முன்தினம் மேத்தா நகர் மெடிக்கல் கடையில் நோட்டை மாற்றும் போது நான் சிக்கிவிட்டேன்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார். #FakeCurrency #arrest

    Next Story
    ×