search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குருவித்துறை பெருமாள் கோவிலில் 4 சிலைகள் கொள்ளை
    X

    குருவித்துறை பெருமாள் கோவிலில் 4 சிலைகள் கொள்ளை

    குருவித்துறை பெருமாள் கோவிலில் பூட்டை உடைத்து 4 ஐம்பொன் சிலைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் சுயம்பு கோவிலாகும். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். சமீபத்தில் குரு பெயர்ச்சி வழிபாடும் இங்கு விமரிசையாக நடை பெற்றது.

    இன்று காலை அர்ச்சகர் ரகு கோவிலுக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    காடுவெட்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கோவிலின் உள்ளே இருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சீனிவாசப் பெருமாள் ஐம்பொன் சிலைகள் கொள்ளை போயிருப்பதாக செயல் அலுவலர் செந்தில் குமார் போலீசில் புகார் தெரிவித்தார்.

    சுமார் 1 அடி முதல் 1½ அடி உயரம் கொண்ட இந்த சிலைகளின் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது அதிகாலை 3 மணிக்கு 2 மர்ம மனிதர்கள் கோவிலின் கதவை கடப்பாறையால் உடைத்து உள்ளே நுழைவது தெரியவந்தது. அவர்கள் கோவிலின் உள்ளே சர்வ சாதாரணமாக நடந்து வந்து அங்கிருந்த உற்சவர் சிலைகளை எடுத்து செல்வதும் கேமிராவில் பதிவாகி உள்ளது. அவர்கள் வடநாட்டு வாலிபர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    கொள்ளையர்கள் மோப்ப நாய் தங்களை கண்டு பிடிக்காமல் இருப்பதற்காக கோவிலை விட்டு வெளியே வந்ததும் சிறுநீர் கழித்து சென்றுள்ளது போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சிலையை திருடிச் சென்ற மர்ம மனிதர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×