search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திரா மார்க்கத்திற்கு மாதவரம் பஸ்நிலையத்தில் இருந்து 477 பஸ்கள் இயக்கப்படுகிறது
    X

    ஆந்திரா மார்க்கத்திற்கு மாதவரம் பஸ்நிலையத்தில் இருந்து 477 பஸ்கள் இயக்கப்படுகிறது

    ஆந்திரா மார்க்கத்திற்கு 477 பஸ்கள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆந்திரா மார்க்கமாக பயணம் செய்யக் கூடியவர்கள் இனி கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை. #MadhavaramBusStop
    சென்னை:

    சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் அதிகளவு பஸ்களை இயக்கக் கூடிய மையமாக திகழ்கிறது.

    தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் பஸ்கள் வந்து செல்கின்றன. 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் இந்த பஸ் நிலையத்திற்கு மாநகர பஸ்களும் தினமும் ஆயிரத்திற்கும் மேல் சென்று வருகின்றன.

    தினசரி 2278 அரசு பஸ்கள் அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்தன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக பண்டிகை காலங்களில் பஸ்களை இயக்குவதில் கடும் சிரமம் ஏற்படுகிறது.

    பஸ் நிலையத்தில் இருந்து வெளியே செல்வதிலும், உள்ளே வருவதிலும் அங்கு நிறுத்தி வைப்பதிலும் நெரிசல் ஏற்பட்டு வருவதால் பல மணி நேரம் கோயம்பேடு பகுதியிலேயே முடங்கி விடுகின்றன. இதனால் கடந்த 2 வருடமாக தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் 6 இடங்களில் தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப்பட்டு நெரிசல் குறைக்கப்பட்டன.

    இதற்கிடையில் மாதவரத்தில் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அடுக்கு மாடி பஸ்நிலையம் புதிதாக கட்டப்பட்டது. இந்த பஸ்நிலையத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். புதிய பஸ் நிலையத்தில் ஆந்திரா மார்க்கத்திற்கு செல்லக் கூடிய பஸ்கள் மட்டும் இயக்கப்படுகிறது.

    காளகஸ்தி, திருப்பதி, நாயுடுபேட்டை, நெல்லூர், நகரி, புத்தூர், சத்தியவேடு, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அங்கிருந்து பஸ்கள் புறப்பட்டு செல்லும்.

    இதுவரையில் கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து இந்த பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று முதல் மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 238 பஸ்களும், அரசு விரைவு போக்குவரத்து கழக (எஸ்.இ.டி.சி.) 6 பஸ்களும், ஆந்திர மாநில அரசு பஸ்கள் 205-ம், தனியார் பஸ்கள் 28-ம் என மொத்தம் 477 பஸ்கள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆந்திரா மார்க்கமாக பயணம் செய்யக் கூடியவர்கள் இனி கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை. மாதவரம் அடுக்குமாடி பஸ் நிலையத்திற்கு தான் போக வேண்டும்.

    இதுவரையில் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட ஆந்திர மார்க்க 477 பஸ்கள் அங்கிருந்து மாதவரத்திற்கு மாற்றப்பட்டதால் கோயம்பேட்டில் நெரிசல் குறைந்துள்ளது. பயணிகள் கூட்டம் மூன்றில் ஒரு மடங்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் பஸ்களை கோயம்பேட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதில் இருந்த நெருக்கடியும் இனி குறையும் என்று கூறப்படுகிறது.

    மாதவரம் புதிய பஸ் நிலையத்திற்கு சென்னையின் முக்கிய பகுதிகளில் இருந்து இணைப்பு பஸ் விட திட்டமிடப்படுகிறது. கோயம்பேடு, பாரிமுனை, எழும்பூர், தாம்பரம், அடையாறு, திருவான்மியூர், வண்டலூர், அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளில் இருந்து மாதவரம் புதிய பஸ்நிலையத்திற்கு மாநகர பஸ்கள் அதிகளவு இயக்கினால்தான் பொது மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று கருதி மாநகர போக்குவரத்து கழகம் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 37 மாநகர பஸ்கள் தற்போது பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இதுதவிர 216 மாநகர பஸ்கள் அங்கு நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. #MadhavaramBusStop
    Next Story
    ×