search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம்: முதல்-அமைச்சர் 10-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்
    X

    திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம்: முதல்-அமைச்சர் 10-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்

    திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு 10-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். #SivanthiAditanar
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரில் அரசு சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று கடந்த ஆண்டு தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதைத்தொடர்ந்து திருச்செந்தூரில் தூத்துக்குடி பிரதான சாலையில் உள்ள ஆதித்தனார் கல்லூரி அருகே சிவந்தி அகாடமி வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) காணொலி காட்சி மூலம் மணிமண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையொட்டி நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டப்படும் இடத்தை நேரில் ஆய்வு செய்தார். மேலும் மாதிரி வரைபடத்தையும் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நடந்த விழாவில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதையொட்டி கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி ரூ.1 கோடியே 34 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டில் உடனடியாக மணிமண்டபம் கட்டப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து வருகிற 10-ந்தேதி காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். திருச்செந்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, தாசில்தார் தில்லைபாண்டி, மண்டல துணை தாசில்தார் கோமதி சங்கர், தூத்துக்குடி பொதுப்பணி துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) சுகுமார், இளநிலை பொறியாளர் கணேசன், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன், திருச்செந்தூர் வருவாய் ஆய்வாளர் மாரியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம், திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (பஞ்சாயத்து) மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #SivanthiAditanar
    Next Story
    ×