search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் பரவலாக மழை
    X

    திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் பரவலாக மழை

    திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. #Rain

    திருச்சி:

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை மற்றும் தமிழகத்தையொட்டியுள்ள பகுதிகளின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதே போல் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்த நிலையில் நேற்று மழை பெய்யவில்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் இரவு முதல் இன்று காலை வரை லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக உய்யக்கொண்டான் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு திருவெறும்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட வேங்கூர், குவளக்குடி, கீழமுல்லக்குடி, ஒட்டக்குடி உள்ளிட்ட பகுதி வயல்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் 30 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

    அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக ஜெயங்கொண்டத்தில் 32 மி.மீ. மழை பெய்துள்ளது. அரியலூரில் 7 மி.மீ., திருமானூரில் 15 மி.மீ., செந்துறையில் 21 மி.மீ. மழை பெய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 22 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.


    கரூர் மாவட்டத்தில் தோகைமலையில் 21 மி.மீ. பாலவிடுதியில் 12.3மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் 66.40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆதனக்கோட்டையில் 26 மி.மீ. மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது.

    நாளை 7-ந்தேதி ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மாவட்ட நிர்வாகங்கள் செய்து வருகின்றன.அதன்படி திருச்சி மாவட்டத்தில் 154இடங்கள் அபாய இடங்களாக கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

    கரூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளாக 76 இடங்கள் கண்டறியப்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை பணிகள் துரிதமாக நடப்பதாக கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். #Rain

    Next Story
    ×