search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னரின் செயலுக்கு அமைச்சர் துணை செல்வது ஏன்?- அன்பழகன் எம்எல்ஏ கேள்வி
    X

    கவர்னரின் செயலுக்கு அமைச்சர் துணை செல்வது ஏன்?- அன்பழகன் எம்எல்ஏ கேள்வி

    கவர்னர் கிரண்பேடியின் செயலுக்கு அமைச்சர் துணை செல்வது ஏன்? என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார். #anbalaganmla #kiranbedi

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித்தலைவர் அன்பழகன் எம்எல்ஏ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது தொகுதியில் 2 நாட்களுக்கு முன் நடந்த அரசு விழாவில் எம்.எல்.ஏ.வான நான் கவர்னரால் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை கவர்னர் வெளியேற்றிய நிகழ்வை புதுவை அரசு திட்டமிட்டு திசைதிருப்பும் வகையில் செயல்படுகிறது.

    இதுதொடர்பாக சில விளக்கத்தை நான் கூற வேண்டியுள்ளது. அரசு விழாவில் என்னை பேச அழைத்தனர். அரசு செய்ய வேண்டிய கடமை, பொறுப்பு ஏழை எளிய மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள், திறந்தவெளி மலம் கழிப்பிடம் இல்லாத மாநிலமாக அவசரமாக அறிவிக்க வேண்டியது ஏன்? என கேள்வி எழுப்பினேன்.

    நான் பேச தொடங்கிய 7-வது நிமிடத்தில் துண்டு சீட்டு தரப்பட்டது. பேச்சை விரைவாக முடிக்கும்படி கூறியிருந்தனர். 5 நிமிடத்தில் பேசி முடிப்பதாக நான் கூறினேன். நான் பேசிய மேடைக்கும், கவர்னர் அமர்ந்திருந்த இடத்திற்கும் 10 அடி இடைவெளி இருக்கும். அங்கிருந்து எழுந்து வந்த கவர்னர் என் பேச்சை நிறுத்தும்படி கூறினார்.

    மக்கள் பிரச்சினையை நான் பேச வேண்டும் என நான் கூறியபோது மைக் இணைப்பை துண்டித்தனர். நான் கவர்னரிடம் இவ்வாறு நீங்கள் செய்யக்கூடாது? என கூறினேன். அதற்கு கவர்னர், ‘டோண்ட் ஸ்பீக், யூ கோ’ என்றார்.

    நான் எம்.பி.யிடம் இதை கூற சென்றேன். இருக்கையில் நான் அமரப்போவதாக நினைத்த கவர்னர் இரு கைகளையும் கூப்பி ‘யூ கோ’ என்று கூறினார். இதை அமைச்சர்களும் கண்டுகொள்ளவில்லை. அதிகார பலத்தின் உச்சக் கட்டத்தில் சென்று மேடையில் இருந்து வெளியேற்றுவதிலேயே கவர்னர் குறியாக இருந்தார். அங்கு நான் தர்ணாவில் ஈடுபட முயன்றேன்.

    இவ்வளவு நடந்தும் அமைச்சர்கள் தடுக்க முயற்சிக்கவில்லை. பொது இடத்தில் என்னை களங்கப்படுத்தியதை என்னால் தாங்க முடியவில்லை. இதனால் கவர்னரை ‘யூ கோ’ என்று கூறியபோதுதான் அமைச்சர் நமச்சிவாயம் எழுந்து என் கைகளை பிடித்து விடுங்கள் அண்ணா என்று கூறினார்.

    அவர் சகோதார முறையில்தான் என்னை பிடித்திருப்பார் என நினைக்கிறேன். அதே எண்ணத்தில்தான் அவரது கையை நான் தடுத்தேன். நான் சென்ற பிறகு மேடையில் அமைச்சர் நமச்சிவாயம் என்னை தரக்குறைவாக பேசியது தவறு. என்னை கண்டிக்கும் உரிமையை அவர் இழந்துவிட்டார். இது குறித்து சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்துள்ளேன்.

    அமைச்சர் தனது ஆதரவாளர்கள் மூலம் அவர் தொகுதியில் என் கொடும்பாவியை எரித்துள்ளார். அமைச்சரிடம் நான் தவறான முறையில் நடந்துகொண்டதுபோல அவரது ஆதரவாளர்கள் சித்திரிக்கின்றனர். என் மீது தவறு இல்லை என்பது அமைச்சர் நமச்சிவாயத்திற்கு தெரியும். விழா மேடையின் கீழ் நாங்கள் நின்றிருந்தபோது நிகழ்ச்சி நிரலில் என் பெயர் பேசும் இடத்தில் இல்லை. இதுதொடர்பாக நான் கேட்டபோது, நமச்சிவாயம் துறை அமைச்சரான என் படத்தையே அவர்கள் போடவில்லை.

    எனக்கே இந்த நிலைமைதான் எனக்கூறி என்னை மேடைக்கு அழைத்து சென்றார். மேடையில் அவரை தாக்க வந்ததாக கவர்னரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    அவர் கவர்னருக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன? வடநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு ஆதரவு அளித்து தமிழனான என்னை அவமானப்படுத்தியதன் பின்னணி என்ன? தமிழன் ஆன எனக்கு அமைச்சர் சிபாரிசு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வராதா? பிரச்சினையின் கடைசி சமயத்தில்தான் அமைச்சர் என்னை உரிமையோடு தடுத்தார்.

    தமிழர்களை வடநாட்டில் இருந்து வருபவர்கள் அடக்கி ஆள வேண்டும் என்பதற்கு அமைச்சர் ஏன் துதிபாடுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன் உள்ளிட்ட சிலர் கவர்னர் தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. இந்த சம்பவத்தின்போது முதல்-அமைச்சர் இல்லை. சபாநாயகரிடம் நாங்கள் முறையிட்டுள்ளோம். நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் கவர்னரிடம் மனு அளிப்பது ஆட்சிக்கு அழகா? என தெரியவில்லை.

    ஒரு புறம் முதல்- அமைச்சர் கவர்னர் தவறானவர், அவர் தகுதியற்றவர் என கூறுகிறார். நானும் கவர்னருக்கு எதிராக பேசியுள்ளேன். இதற்காக கவர்னர் என்னை பழிவாங்குகிறாரா? கவர்னரின் செயலுக்கு அமைச்சர் துணை செல்வதற்கு முதல்- அமைச்சர் விளக்கம் தர வேண்டும்.

    சபாநாயகர் எங்கள் உரிமை மீறல் மீது நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். நடவடிக்கை இல்லாவிட்டால் கட்சி தலைமையிடம் பேசி சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #anbalaganmla #kiranbedi

    Next Story
    ×