search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோட்டையை முற்றுகையிட முயற்சி - பஸ் தொழிலாளர்கள் கைது
    X

    கோட்டையை முற்றுகையிட முயற்சி - பஸ் தொழிலாளர்கள் கைது

    அரசு பிடித்தம் செய்து நிலுவை வைத்துள்ள ரூ.7000 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோட்டையை நோக்கி செல்ல முயன்ற பஸ் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். #Transportworker
    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் அரசு பிடித்தம் செய்து நிலுவை வைத்துள்ள ரூ.7000 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

    இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து செயலாளர் டேவிதார் தலைமையில் தொழிற்சங்கங்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இன்று கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக தொழிற் சங்கத்தினர் அறிவித்தனர்.

    பஸ் தொழிலாளர்கள் பல்லவன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோட்டையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திட்டமிட்டு அங்கு திரண்டனர்.

    தொ.மு.ச. செயலாளர் சண்முகம், பொதுச் செயலாளர் நடராஜன், சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் ஏ.சவுந்தர் ராஜன், சி.ஐ.டி.யூ. சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், பாட்டாளி தொழிற்சங்க முத்து குமார், ஏ.ஐ.டி.யூ.சி லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் பஸ் தொழிலாளர்கள் குவிந்தனர்.

    அரசுக்கு எதிராக கோரிக்கைகளை முன் வைத்து முழக்கமிட்டனர். சிறிது நேரம் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு அங்கிருந்து கோட்டையை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து மறித்து கைது செய்தனர்.

    பல்லவன் இல்ல சாலையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முதலில் தொழிற்சங்க நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். அதன் பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பஸ் மற்றும் வேன்களில் கொண்டு செல்லப்பட்டனர்.

    போராட்டத்தில் தொழிலாளர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டதால் அவர்களை கட்டுப்படுத்த போலீசாரும் அதிகளவு குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் தொழிலாளர்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுத்து கைதானார்கள். #Transportworker
    Next Story
    ×