search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டிதீர்த்த கனமழை
    X

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டிதீர்த்த கனமழை

    குமரி மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. தக்கலையில் அதிக பட்சமாக 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. #Rain #Northeastmonsoon

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டி வருகிறது.

    தற்போது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது வலு பெற்று 6-ந்தேதியில் இருந்து அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறி வடமேற்கு திசை நோக்கி நகரத்தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று குமரி மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. நாகர்கோவிலில் மதியம் பெய்யத் தொடங்கிய மழை சுமார் ஒரு மணிநேரம் பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இரவும் மழை நீடித்தது.

    தக்கலை பகுதியில் சுமார் 3 மணிநேரமாக கனமழை கொட்டியது. அங்கு அதிக பட்சமாக 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. குழித்துறை, குளச்சல், குருந்தன்கோடு, முள்ளங்கினாவிளை, மயிலாடி, கொட்டாரம், கன்னியாகுமரி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    இரவும் மழை பெய்ததால் இதமான குளிர்காற்று வீசியது. இன்று காலையிலும் மாவட்டம் முழுவதும் வானம் மப்பும், மந்தார மாகவே காணப்பட்டது. திடீர், திடீரென மழை பெய்தது. திற்பரப்பு அருவிப் பகுதியில் பெய்து வரும் மழையினால் அங்கு இதமான சூழல் நிலவுகிறது. அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பெய்து வரும் மழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக் கூடிய தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

    தொடர் மழையின் காரணமாக பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் மூடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து மட்டும் பாசனத்திற்காக 757 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் இன்று காலையில் 26.20 அடியாக உள்ளது. அணைக்கு 584 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 67.50 அடியாக உள்ளது. அணைக்கு 246 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 21.90 அடியாக உள்ளது.

    தொடர் மழையின் காரணமாக கீரிப்பாறை, குலசேகரம், தடிக்காரன் கோணம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளிலும் மழை நீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

    தோவாளை, செண்பக ராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-15.4, பெருஞ்சாணி-40.2, சிற்றாறு 1-30.4, சிற்றாறு 2-24, மாம்பழத்துறையாறு-30, குழித்துறை-50, தக்கலை-70, குளச்சல்-12.4, குருந்தன்கோடு-19, அடையா மடை-22, கோழிப்போர்விளை-58, முள்ளங் கினாவிளை-6, புத்தன் அணை-41.6, திற்பரப்பு-24, நாகர்கோவில்-39.2, பூதப்பாண்டி-13.4, சுருளோடு-46.2, கன்னிமார்-7.2, ஆரல்வாய்மொழி-12.2, மயிலாடி-14, கொட்டாரம்-34, ஆனைக் கிடங்கு-40, இரணியல்-17.2.  #Rain #Northeastmonsoon

    Next Story
    ×