search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூரம் குறைக்கப்பட்ட வெளியூர் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்
    X

    தூரம் குறைக்கப்பட்ட வெளியூர் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்

    தூரத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதால் பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடுக்கு மதுரவாயல் வழியாக செல்லும் வெளியூர் பஸ்சில் ரூ.19 கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள். #Buses
    சென்னை:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த பஸ்களில் சென்னை புறநகர் பகுதியில் இருந்து கோயம்பேடுக்கு பயணிகளை ஏற்றி வருகிறார்கள்.

    வெளியூர் பஸ்களில் தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் பூந்தமல்லியில் இருந்து போரூர், கிண்டி வழியாக இயக்கப்பட்டன.

    தற்போது மதுரவாயல் வழியாக பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடுக்கு செல்கின்றன. முன்பு போரூர், கிண்டி வழியாக 24 கிலோ மீட்டர் தூரத்தில் பஸ்கள் இயக்கப்பட்டன.

    மெட்ரோ ரெயில் பணி மற்றும் போரூர் மேம்பாலம் பணி காரணமாக மாற்று பாதையான மதுரவாயல் வழியாக 16 கிலோ மீட்டர் தூரத்தில் இயக்கப்படுகின்றன. அப்பணிகள் முடிந்தாலும் தற்போதும் பஸ்கள் மதுரவாயல் வழியாகவே இயக்கப்படுகின்றன.

    தூரத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதால் பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடுக்கு மதுரவாயல் வழியாக செல்லும் வெளியூர் பஸ்சில் ரூ.13 கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் ரூ.19 கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    இதுகுறித்து பயணி ஒருவர் கூறும்போது, “வெளியூரில் இருந்து சென்னைக்குள் வரும் பஸ்களில் தூரம் குறைக்கப்பட்டாலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். மதுரவாயல் வழியாக செல்லும் பஸ் குறைந்த தூரத்தில் செல்வதால் கட்டணம் குறைக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வது இல்லை. ரூ.19 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. சில பஸ்களில் ரூ.24 கட்டணம் வசூல் செய்கிறார்கள்” என்றார்.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, “கிண்டி வழியாக பஸ்களை இயக்க போக்குவரத்து போலீசார் அனுமதி அளிப்பது இல்லை. போலீசார் அனுமதி கொடுத்தால் சென்னை நகர சாலைக்குள் பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.

    தினமும் கோயம்பேட்டில் இருந்து வெளியூருக்கு 500 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு மாதமும் 50 லட்சத்துக்கு மேல் வசூல் செய்யப்படுகிறது. #Buses
    Next Story
    ×