search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் மழை எதிரொலி - குமுளி மலைச்சாலையில் மீண்டும் நிலச்சரிவு
    X

    தொடர் மழை எதிரொலி - குமுளி மலைச்சாலையில் மீண்டும் நிலச்சரிவு

    தொடர் மழை எதிரொலியாக குமுளி மலைச் சாலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. #Landslide

    கூடலூர்:

    கேரளாவில் கடந்த மாதம் கன மழை பெய்தது. குமுளி மலைச்சாலையிலும் பெய்த கனமழை காரணமாக மாதா கோவில் அருகே இரைச்சல் பாலம் உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு அதிகாரிகள் மணல் மூடையை வைத்து தற்காலிகமாக சாலையை சீரமைத்தனர்.

    தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மீண்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மோட்டார் சைக்கிள்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

    கடந்த 2 நாட்களாக கூடலூர், குமுளி, லோயர் கேம்ப் பகுதியில் தொடர்ந்து கன மழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக மாதா கோவில் அருகேயும் இரைச்சல் பாலம் அருகே உள்ள வளைவு பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டது.

    மேலும் சாலை ஓரம் இருந்த மரம் முறிந்து விழுந்தது. இதனால் இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    எனவே பாதுகாப்பு கருதி அனைத்து வாகனங்களுக்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் பெய்த கன மழை காரணமாக மணல் மூடைகள் அடித்துச் செல்லப்பட்டது. எனவே கம்பம்மெட்டு சாலையை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    கூடலூர் பகுதியில் இருந்து குமுளி டீக்கடை, ஓட்டல், பேக்கரி ஆகியவற்றுக்கு பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மோட்டார் சைக்கிள்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதே போல் தேயிலை எஸ்டேட் செல்லும் தொழிலாளர்களும் கடந்த சில நாட்களாக வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கம்பம் மெட்டு வழியாக சென்றால் வெகு தூரம் என்பதால் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல வில்லை. ஒரு சிலர் மட்டும் பைக்குகளில் கம்பம் மெட்டு பகுதிக்கு சென்று வருகின்றனர். தொடர் மழை காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பால் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். #Landslide

    Next Story
    ×