search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரியில் தங்கப்புதையலா?- தொல்லியியல் துறை ஆய்வு செய்ய கோரிக்கை
    X

    வீராணம் ஏரியில் தங்கப்புதையலா?- தொல்லியியல் துறை ஆய்வு செய்ய கோரிக்கை

    காற்றுக்குமிழ்கள் தொடர்ந்து வெளியேறுவதால் வீராணம் ஏரியில் தங்கப்புதையல் இருக்கலாம் என தகவல் பரவியதால் தொல்லியியல் துறை ஆய்வு செய்ய கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Veeranamlake

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். விவசாயிகளின் உயிர் நாடியாகவும், சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஏரி விளங்கி வருகிறது.

    இந்த ஏரி நிரம்பி தற்போது கடல்போல் காட்சி அளிக்கிறது. ஏரியின் நீர்மட்டம் 45.20 அடியாக உள்ளது. வீராணம் ஏரியில் கடந்த 4 நாட்களாக நீரினுள் இருந்து காற்றுக்குமிழ்கள் கொப்பளித்து கொண்டே இருக்கிறது. இதை பொதுமக்கள் அதிகளவில் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். ஏரியில் தங்கப்புதையல் இருக்கலாம் என்று ஒரு தகவல் பொதுமக்கள் மத்தியில் பரவி உள்ளது.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    வீராணம் ஏரியில் ஒவ்வொரு ஆண்டும் காற்றுக்குமிழ்கள் வெளியேறி வருகின்றன. இதைப்பார்த்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்து வருகிறார்கள். மேலும் அந்த காற்றுக்குமிழ்கள் வெளியேறும் இடத்தில் புதையல் இருப்பதாகவும் பொதுமக்களிடையே தகவல் பரவி வருகிறது.

    கடந்த 2 ஆண்டாக கொள்ளுமேடு அருகே தென்ரெட்டை மதகு பகுதியில் சுமார் 3 அடி சுற்றளவில் அருகருகே காற்றுக்குமிழ்கள் கொப்பளித்து வெளியே வந்தன.

    இதேபோல் கடந்த ஆண்டும் அதே இடத்தில் காற்றுக்குமிழ்கள் கொப்பளித்து வெளியே வந்தது. அதனை மணல் மூட்டை கொண்டு அடைத்து பார்த்தனர். இருப்பினும் அந்த காற்றுக்குமிழ்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

    சோழர்கள் காலத்தில் விவசாய பயன்பாட்டுக்காக வீராணம் ஏரியை உருவாக்கினார்கள். இந்த ஏரியை அமைக்கும் பணியில் ஏராளமான படை வீரர்கள் ஈடுபட்டனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக ஏரியில் ஆங்காங்கே கிணறுகள் தோண்டப்பட்டன. நாளடைவில் அந்த கிணறுகள் அடைபட்டு இருக்கலாம். சமீபத்தில் ஏரியில் தூர்வாரும் பணி நடந்தது. அதனால் அந்த பகுதியில் நீர் குமிழ்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.

    எனினும் பொதுமக்களின் அச்சத்தையும், பீதியையும் போக்கும் வகையில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உயர் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வீராணம் ஏரியை ஆய்வு செய்ய வேண்டும். ஏரியில் குமிழ்கள் வெளியேறும் இடத்தில் தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Veeranamlake 

    Next Story
    ×