search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கோட்டையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்: தமிழிசைக்கு அனுமதி மறுப்பு
    X

    செங்கோட்டையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்: தமிழிசைக்கு அனுமதி மறுப்பு

    செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நெல்லையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். #tamilisai #bjp

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 13-ந் தேதி இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கல்வீச்சு, தடியடி சம்பவங்களும் நடந்தன. கடைகள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து செங்கோட்டையில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை அனைத்தும் குண்டாற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது.

    கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்தி குமார் மற்றும் அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் செங்கோட்டை பகுதியில் அமைதி திரும்பியது. எனினும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க செங்கோட்டை சுற்றுப்பகுதியில் வருகிற 30-ந் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டித்து கலெக்டர் உத்தர விட்டார்.

    செங்கோட்டை நகரை சுற்றி 7 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கபட்டு வருகின்றன. இந்நிலையில் பா.ஜ.க. சார்பில் செங்கோட்டையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் அறிவித்திருந்தார். இதற்காக இன்று மதியம் அவர் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

    செங்கோட்டையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அங்கு எவ்வித ஆர்ப்பாட்டமும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழிசை சவுந்தர்ராஜன் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்ய போலீசார் திட்ட மிட்டுள்ளனர்.

    மேலும் செங்கோட்டைக்கு செல்லவும் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர் தூத்துக்குடியில் இருந்து நெல்லை வரும் வழியில் பாளை கே.டி.சி.நகரில் வைத்து கைது செய்யப்படலாம் என பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்காக கே.டி.சி.நகரில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தலைமையில் 500- க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர் ஆலங்குளம் வழியாக செல்லும் பட்சத்தில் அங்குவைத்தும் அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இதையடுத்து ஆலங்குளத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

    பா.ஜனதா போராட்ட அறிவிப்பை தொடர்ந்து செங்கோட்டையில் மீண்டும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏ.டி.எஸ்.பி.க்கள் மங்களீஸ்வரன், முகமது அஸ்லாம் ஆகியோர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மணிகண்டன், ஞானராஜ், பழனிகுமார் மற்றும் 12 இன்ஸ்பெக்டர்கள், 16 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனிடையே மதியம் விமானநிலையத்தில் வந்து இறங்கிய தமிழிசை சவுந்தராஜனிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மற்றும் போலீஸ் அதிகாரிகள் செங்கோட்டையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அங்கு நீங்கள் செல்ல அனுமதியில்லை என்றனர்.


    தொடர்ந்து தமிழிசை சவுந்தர்ராஜன் செங்கோட்டை செல்வதில் உறுதியாக இருந்ததால் அவரிடம் விமான நிலையத்திலேயே போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது.

    இதனிடையே தமிழிசை சவுந்தரராஜன் செங்கோட்டை செல்லாமல் ஆலங்குளத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து பா.ஜனதா தொண்டர்கள் ஆலங்குளத்தில் குவிந்துள்ளனர். #tamilisai #bjp

    Next Story
    ×