search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிதாக கட்சி தொடங்குபவர்கள் நிலைத்து நிற்க மாட்டார்கள்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
    X

    புதிதாக கட்சி தொடங்குபவர்கள் நிலைத்து நிற்க மாட்டார்கள்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

    புதிது புதிதாய் கட்சி தொடங்கியவர்கள் நிலைத்து நிற்கமாட்டார்கள் என்று விருதுநகரில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். #TNMinister #RajendraBalaji
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

    சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து 1 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள்.

    அ.தி.மு.க. சோதனையான காலகட்டத்தை தாண்டி இயங்கி கொண்டு இருக்கின்றது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சிலர் பகல் கனவு கண்டனர். இன்று கட்சியும், ஆட்சியும் பாதுகாப்பாக உள்ளது.

    கட்சி, இரட்டை இலை சின்னம் இருக்கும் இடத்தில்தான் 1½ கோடி தொண்டர்கள் இருக்கின்றனர். கூட்டுறவு சங்க தேர்தலில் எப்படி வெற்றி பெற்றோமோ அதேபோன்று வரும் உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெறுவோம்.

    உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும். அனைத்து பதவிகளையும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெறும் வகையில் பூத் ஏஜெண்ட் நியமிக்கப்பட வேண்டும். ஒரு பூத் ஏஜெண்ட் 100 வாக்குகளை பெறும் வகையில் பணியாற்ற வேண்டும். உழைக்கக்கூடிய அத்தனை பேருக்கும் பதவி காத்திருக்கிறது. எந்த தேர்தல் வந்தாலும் மக்கள் அ.தி.மு.க.வுக்குதான் வாக்களிக்க உள்ளார்கள்.

    புதிது புதிதாய் கட்சி தொடங்கியவர்கள் நிலைத்து நிற்கமாட்டார்கள். கமல்ஹாசன், ரஜினி ஆரம்பித்துள்ள கட்சி ஒரு அமாவாசைக்கு கூட தாங்காது. அமாவாசையோடு காணாமல் போய் விடும்.

    தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லை. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும். தி.மு.க. எதிர்கட்சி வரிசையில் இருக்கும். ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், தலைவர், துணைத்தலைவர் பதவிகள் உள்பட அனைத்து உள்ளாட்சி பதவிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.

    ஆலோசனை கூட்டத்தில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ராஜவர்மன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #TNMinister #RajendraBalaji
    Next Story
    ×