search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்லில் சென்னை சுற்றுலா பயணிகள் மீது போலீசார் தாக்குதல்
    X

    ஒகேனக்கல்லில் சென்னை சுற்றுலா பயணிகள் மீது போலீசார் தாக்குதல்

    ஒகேனக்கல்லில் சென்னை சுற்றுலா பயணிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 40), ரத்னபிரகாஷ் (39), ராகுல் (32) உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 15 பேர் டிராவல்ஸ் வேனில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று சுற்றுலாவுக்கு வந்தனர்.

    நேற்று காலை அங்குள்ள ஆற்றில் குளித்து விட்டு பரிசலில் செல்வதற்காக அங்குள்ள பரிசல் கவுண்டருக்கு முருகேசன் சென்றார். அப்போது அங்கு 15 பேருக்கு டிக்கெட் வாங்கிய அவர் தங்களுக்கு 3 பரிசல் போதும், அதில் சென்று வருகிறோம் என்றார். ஆனால் பரிசல் ஓட்டிகளும், அங்கிருந்த ஊர்காவல் படை வீரர்களும் ஒரு பரிசலில் 4 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர் என்றனர்.

    ஒரு பரிசல் 4 பேருக்கு மேல் அனுதிக்க முடியாது. இதனால் பரிசலில் செல்லும் உங்களுக்கு சரியான பாதுகாப்பு இருக்காது. எனவே, 4 பரிசல்களில் சென்று வாருங்கள் என பரிசல் டிக்கெட் கவுண்டரில் இருந்தவர்கள் கூறினர். அப்போது முருகேசன் மற்றும் அவருடன் வந்தவர்கள் மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரி முருகேசனிடம், மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த உத்தரவையே அவர்கள் கடைபிடிக்கிறார்கள். உங்களின் பாதுகாப்பு கருதி தான் அவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள்.

    நீங்கள் நினைப்பதுபோல் பரிசலில் செல்ல முடியாது என எச்சரித்தார். அப்போது முருகேசன் திடீரென்று சப்-இன்ஸ்பெக்டர் மாரியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

    இதனால் போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறி தாக்கினர். அவர்கள் அங்கிருந்து செல்லாததால் முருகேசன் உள்ளிட்ட 15 பேரையும், ஒகேனக்கல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது முருகேசனும், அவருடன் வந்தவர்களும் கதறிஅழுதனர். இதையடுத்து அவர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிவிட்டு போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தை அந்த பகுதியில் உள்ளவர்கள் சிலர் வீடியோ பிடித்து வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பினர். சுற்றுலா பயணிகளை போலீசார் தாக்கிய வீடியோ உடனே வைரலாக பரவியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  #Hogenakkal
    Next Story
    ×