search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த தொழில் அதிபர் வீட்டை படத்தில் காணலாம்.
    X
    கொள்ளை நடந்த தொழில் அதிபர் வீட்டை படத்தில் காணலாம்.

    தாராபுரத்தில் தொழில் அதிபர் வீட்டில் 125 பவுன் தங்க- வைர நகைகள் கொள்ளை

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தொழில் அதிபர் வீட்டில் 125 பவுன் தங்க, வைர நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் - அலங்கியம் சாலையில் வசித்து வருபவர் ராஜா ராமலிங்கம் (70). தொழில் அதிபர்.

    இவர் தாராபுரம் ஜவுளி கடை வீதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலும் நடத்துகிறார். ஏராளமான காம்ப்ளக்ஸ் உள்ளது. ஜவுளி கடை உரிமையாளர் சங்க தலைவர், ஆரிய வைசிய செட்டியார் சங்க தலைவராகவும் உள்ளார்.

    ராஜா ராமலிங்கத்துக்கு 3 மகள்கள். இவர்களில் ஒரு மகள் கோவையில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக ராஜா ராமலிங்கம் வீட்டை பூட்டி விட்டு கடந்த 3 நாட்களுக்கு முன் மனைவியுடன் கோவை வந்து விட்டார்.

    நேற்று இரவு 8 மணிக்கு அவர்கள் வீடு திரும்பினார்கள். வீட்டின் முன் பக்க கதவை திறந்து ராஜா ராமலிங்கம் உள்ளே சென்றார். அப்போது வீட்டின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது.

    மின் விசிறியும் ஓடி கொண்டு இருந்தது. வீட்டில் ஏராளமான சிகரெட் துண்டுகள் கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ராஜா ராமலிங்கம் பீரோ இருந்த அறைக்கு சென்று பார்த்தார்.

    அப்போது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த வெள்ளி பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவில் இருந்த 125 பவுன் தங்க நகை, மற்றும் வைர நகைகள் ரூ. 8 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை காணவில்லை.

    அதனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டது தெரிய வந்தது. ராஜா ராமலிங்கத்தின் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நகை -பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    கொள்ளை போன நகை -பணத்தின் மதிப்பு ரூ. 50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கொள்ளை குறித்து ராஜா ராமலிங்கம் தாராபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு உள்ளது. கைரேகை நிபுணர்களும் வந்து கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர்.

    ராஜா ராமலிங்கம் வீட்டில் வைர நகைகள் உள்பட கோடிக்கணக்கில் கொள்ளை நடைபெற்று இருக்கலாம் எனவும் போலீசார் விசாரணைக்கு பின்னர் தான் இதன் முழு விவரம் தெரிய வரும் எனவும் கூறப்படுகிறது.

    தொழில் அதிபர் வீட்டில் நகை -பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×