search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 12 லட்சம் வீடுகளுக்கு புதிய சொத்துவரி நோட்டீஸ்
    X

    சென்னையில் 12 லட்சம் வீடுகளுக்கு புதிய சொத்துவரி நோட்டீஸ்

    சென்னையில் 12 லட்சம் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய சொத்துவரி குறித்த நோட்டீஸ் இன்று முதல் வீடு வீடாக வினியோகிக்கப்படுகிறது. #ChennaiCorporation
    சென்னை:

    சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வரும் சொத்து வரியின் அடிப்படையில் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சியோடு சேர்க்கப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே அதிகளவு சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் பழைய வார்டு பகுதிகளை விட புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் சொத்துவரி பல மடங்கு அதிகமாகும். இவற்றையெல்லாம் ஆய்வு செய்து சொத்துவரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே அதிகமாக உள்ள பகுதிகளில் குறைந்த விகிதத்திலும், குறைவாக உள்ள இடங்களில் அதிகமாகவும் உயர்வு செய்யப்பட்டு இருக்கிறது. 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்துவரி உயர்ந்து இருக்கிறது.

    சென்னையில் 12 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு கடந்த 18-ந்தேதி முதல் புதிய சொத்து வரி நடைமுறைப்படுத்தப்பட்டது. 2018-19 ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான முதல் அரையாண்டு காலத்திற்கும் உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரியினை செலுத்த வேண்டும்.

    ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சொத்துவரி உயர்ந்து இருக்கிறது என்பதனை ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம். சொத்து அளவு, கட்டிடத்தின் பரப்பளவு போன்றவற்றை கணக்கிட்டு சொத்து வரி மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது.

    சொத்தின் உரிமையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்து அதிகாரிகள் சொத்து வரியினை உயர்த்தி உள்ளனர்.

    உயர்த்தப்பட்ட சொத்து வரி குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. ஆட்சேபனை இருக்குமாயின் அதனை தெரிவிக்க பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் 12 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் இன்று முதல் வீடு வீடாக வினியோகிக்கப்படுகிறது. சொத்துவரி எவ்வளவு உயர்த்தப்பட்டு இருக்கிறது என்ற தகவல் ஒவ்வொருவருக்கும் மாநகராட்சி மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 46,600 தெருக்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் இந்த நோட்டீஸ் வழங்கப்படுகிறது.

    சொத்துவரி உயர்வு குறித்த ஆட்சேபனை இருக்குமாயின் நோட்டீஸ் பெற்ற 15 நாட்களுக்குள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

    சென்னை மாநகராட்சி 3 மண்டல துணை கமி‌ஷனர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாநகராட்சி வருவாய் அதிகாரிகள் கூறியதாவது:-

    குடியிருப்பு பகுதிகளுக்கு 50 சதவீதமும், வணிக கட்டிடங்களுக்கு 100 சதவீதம் வரை சொத்து வரி அரசின் உத்தரவுப்படி உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    தெருக்களின் அடிப்படையில் சொத்து மதிப்பு மற்றும் சதுர அடி, நிலம் வழிகாட்டு மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சொத்து வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    சொத்து உரிமையாளர்கள் பூர்த்தி செய்து கொடுத்த விவரங்களை வைத்து ஏற்கனவே உள்ள மதிப்பீட்டினை ஒப்பிடு செய்து புதிய சொத்து வரி முறைபடுத்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே வசூலிக்கப்பட்ட வரி, தற்போது உயர்த்தப்பட்டுள்ள புதிய வரி ஆகியவற்றை விளக்கி ஒவ்வொருவரும் செலுத்த வேண்டிய வரி விவரங்களை வீடு வீடாக இன்று முதல் வழங்கும் பணி நடைபெறுகிறது. இதில் வினியோகிக்கப்படும் நோட்டீசில் ஏதாவது ஆட்சேபனை இருக்குமானால் மண்டல துணை ஆணையரிடம் முறையிடலாம்.

    நோட்டீஸ் பெற்ற 15 நாட்களுக்குள் முறையிட வேண்டும். அதன் பின்னர் வரிவிதிப்பு முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என அந்த முறையீடு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தவறுகள் இருக்குமாயின் சரி செய்யப்படும். முறையான வரி விதிக்கப்பட்டிருப்பின் அது குறித்து விளக்கம் அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #ChennaiCorporation
    Next Story
    ×